2015-09-22 15:08:00

Holguín புரட்சி சதுக்கத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


செப்.22,2015. அன்பு சகோதர, சகோதரிகளே, திருத்தூதரும், நற்செய்தியாளருமான புனித மத்தேயு திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். ஒரு மனம்திரும்புதலை இன்று நாம் கொண்டாடுகிறோம். தன் வாழ்வை மாற்றிய இந்த சந்திப்பைப் பற்றி, மத்தேயு, தன் நற்செய்தியில் கூறியுள்ளார். 'பார்வைப் பரிமாற்றம்' வரலாற்றையே மாற்றும் சக்தி பெற்றதென்பதை அவர் காட்டுகிறார்.

வரிவசூலிப்பவரான மத்தேயு தன் பணியிடத்தில் அமர்ந்திருந்தபோது, இயேசு அவ்வழியே வந்து, 'என்னைப் பின்பற்றி வா' என்று அழைக்க, மத்தேயு எழுந்து, அவரைப் பின்பற்றினார். இயேசு அவரைப் பார்த்தார். மத்தேயுவின் மனதை மாற்றும் வண்ணம் இயேசு பார்த்த அந்தப் பார்வையில் எவ்வளவு அன்பு இருந்திருக்கவேண்டும்!

யூதர்களிடமிருந்து வரி வசூலித்து, உரோமையர்களுக்குத் தந்த ஆயக்காரராக இருந்தவர் மத்தேயு. இஸ்ரயேல் மக்கள், வரி வசூலிப்பவர்களை, துரோகிகளாகக் கருதி, அவர்களை ஒதுக்கி வைத்தனர்.

இதற்கு மாறாக, இயேசு மத்தேயுவைப் பார்த்ததும் நின்றார்; கருணைமிக்க கண்களுடன் அவரைப் பார்த்தார். அந்தப் பார்வை, மத்தேயுவின் மனதைத் திறந்தது, அவருக்கு நலமும், விடுதலையும் அளித்தது. சக்கேயு, பர்த்திமேயு, மகதலா மரியா, பேதுரு போன்ற பலருக்கும் புதுவாழ்வு தந்ததைப் போல, மத்தேயுவுக்கும், அந்தப் பார்வை, புதுவாழ்வைத் தந்தது.

இதுவே நமது கதை. நாம் பார்க்கத் தயங்கினாலும், ஆண்டவர் முதலில் நம்மைப் பார்க்கிறார். கடவுளின் பார்வை நம்மேல் விழுந்த நேரங்களை நன்றியோடு, மகிழ்வோடு எண்ணிப் பார்ப்போம்.

வெளித் தோற்றங்களைத் தாண்டி, நமது பாவங்களைத் தாண்டி, தகுதியின்மை, சமுதாய நிலை ஆகியவற்றைத் தாண்டி,  இயேசுவின் பார்வை செல்கிறது. தாங்கள் தகுதியற்றவர்கள் என்று எண்ணி வாழ்பவர்களைத் தேடியே அவர் வந்தார். இயேசுவின் பார்வை நம்மீது, நம் சமுதாயத்தின் மீது விழுவதற்கு அனுமதிப்போம்.

ஆண்டவர், மத்தேயுவை, கருணையுடன் பார்த்தபின், 'என்னைப் பின்பற்றி வா' என்று அழைத்தார். மத்தேயு எழுந்து அவரைத் தொடர்ந்தார். ஒரு பார்வைக்குப்பின் ஒரு வார்த்தை. அன்புக்குப் பின், பணிசெய்ய அழைப்பு. மத்தேயு முற்றிலும் மாற்றம் பெற்றார். தன் பணியிடம், தான் சேர்த்துவைத்த பணம், தன்னை மக்கள் ஒதுக்கியது என்ற அனைத்தையும் விட்டுவிட்டார். இயேசுவின் பார்வை பட்ட அனைவரும், அடுத்தவரை, தன் சுயநலனுக்காகப் பயன்படுத்துவதை விட்டு வெளியேற வேண்டும்.

இயேசு நமக்கு சவால்கள் நிறைந்த கேள்விகளை முன்வைக்கிறார்: "நீங்கள் நம்புகிறீர்களா? வரிதண்டும் ஒருவர், ஒரு பணியாளராக முடியும் என்பதை நம்புகிறீர்களா? காட்டிக்கொடுக்கும் துரோகி, நண்பராக முடியும் என்பதை நம்புகிறீர்களா? தச்சனின் மகன், இறைவனின் மகனாக முடியும் என்பதை நம்புகிறீர்களா?"

செபத்தில், திருப்பலியில், ஒப்புரவு அருளடையாளத்தில், நம் சகோதர, சகோதரிகளில்,  குறிப்பாக, ஆதரவின்றி கைவிடப்பட்டோரில், ஒதுக்கப்பட்டோரில் ஆண்டவரைக் காண்போம்.

கிறிஸ்துவின் வார்த்தைகளையும், அவரது பிரசன்னத்தையும் அனைவருக்கும் கொணர்வதற்கு, கியூபா தலத்திருஅவை மேற்கொண்டுவரும் முயற்சிகளையும், தியாகங்களையும் நான் அறிவேன்.

“நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்” (எபேசியர் 4:1-3) என்று திருத்தூதர் பவுல் கூறும் விண்ணப்பத்திற்கு, தகுந்த முறையில் பதில் அளிப்போம்.

எல் கோப்ரே பிறரன்பு அன்னை மரியாவை நோக்கி என் கண்களைத் திருப்புகிறேன். மாண்புமிக்க இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்கள் மீதும், அந்த அன்னையின் தாய்மை நிறைந்த பார்வை  விழட்டும். அன்னையின் கருணை நிறை பார்வை நம்மை எப்போதும் பாதுகாத்து வழி நடத்தட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.