2015-09-21 15:43:00

ஹவானா அமல அன்னை பேராலயத்தில் திருத்தந்தை


செப்.21,2015. ஹவானா அரசுத்தலைவர் புரட்சி மாளிகையில் சந்திப்பை முடித்து அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற, ஹவானா அமல அன்னை மற்றும் புனித கிறிஸ்டோபல் பேராலயத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பேராலயத்தை 1748ம் ஆண்டில் இயேசு சபை அருள்பணியாளர்கள் கட்டத் தொடங்கினர். பின்னர் ஹவானா மறைமாவட்டம் உருவாக்கப்பட்ட 1787ம் ஆண்டில் இப்பேராலயம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டது. இப்பேராலயத்தில் கூடியிருந்த கியூப அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் குருத்துவ மாணவர்களுடன் மாலை திருப்புகழ்மாலை திருவழிபாட்டில் கலந்துகொண்டு செபித்தார் திருத்தந்தை. இந்நிகழ்வில் ஹவானா பேராயர் மற்றும் ஓர் அருள்சகோதரி பகிர்ந்து கொண்ட கருத்துக்களைக் கேட்ட பின்னர், இவர்களுக்கென ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த மறையுரையை வழங்காமல் தனது இதயத்தின் ஆழத்தில் எழுந்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை. ஆன்மீக ஏழ்மை, இவ்வுலகச் செல்வத்தின் ஆபத்து, கருணைப் பண்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தினார். இறைமகன் இயேசு இவ்வுலகப் போக்கின்படி அன்புகூரவில்லை. அவர் தம்மையே வெறுமையாக்கி ஏழையானார். நம்மைப்போல் ஒருவராக ஆகும்பொருட்டு நம்மில் ஒருவரானார் என்று கூறிய திருத்தந்தை, திருஅவை ஏழ்மையாக இருக்குமாறு வலியுறுத்தினார், பிறருக்கு இரக்கமும், கருணையும் காட்டுவதில் ஒருபோதும் சோர்வுற வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். இறுதியில் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறன்று ஹவானா இயேசு சபை இல்லமும் சென்றார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.