2015-09-21 15:58:00

திருத்தந்தை - நீங்கள் அங்கிருப்பதால் நான் அங்கிருப்பேன்


செப்.21,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபிலடெல்பியாவில் இச்செவ்வாயன்று 8வது உலக குடும்பங்கள் மாநாடு தொடங்கவிருப்பதை முன்னிட்டு, இஞ்ஞாயிறன்று  ஃபிலடெல்பியா மக்களுக்கு காணொளிச் செய்தி ஒன்றையும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். உலகக் குடும்பங்கள் மாநாட்டிற்குத் தான் வரும்போது திருப்பயணிகளையும், ஃபிலடெல்பியா மக்களையும் சந்திப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன். நீங்கள் அங்கிருப்பதால் நான் அங்கிருப்பேன். ஃபிலடெல்பியாவில் சந்திப்போம் என்று அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை. 8வது உலக குடும்பங்கள் மாநாடு, இம்மாதம் 22 முதல் 25 வரை நடைபெறவிருக்கின்றது. குடும்பங்களின் விழா மாலை திருவழிபாட்டை இம்மாதம் 26, வருகிற சனிக்கிழமையன்றும்,  இம்மாநாட்டின் நிறைவு திருப்பலியை வருகிற ஞாயிறன்றும் நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியின் இறுதியில், ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களின் பிரதிநிதிகளிடம் புனித லூக்கா நற்செய்தி பிரதியை அளிப்பார் திருத்தந்தை. “அன்பே நமது பணி : முழுவதும் உயிர்த்துடிப்புடன் வாழும் குடும்பம்” என்ற தலைப்பில் இம்மாநாடு இச்செவ்வாயன்று ஆரம்பமாகின்றது. மேலும், செப்டம்பர் 25, வருகிற வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கு திருத்தந்தை செல்லும்போது அந்நிறுவனத்தில் திருப்பீடத்தின் கொடி ஏற்றப்பட்டிருக்கும். இக்கொடி ஐ.நா. தலைமையகத்தில் ஏற்றப்படுவது இதுவே முதன் முறையாகும். வெண்மை மற்றும் மஞ்சள் நிறத்தாலான கொடி 1929ம் ஆண்டு அதிகாரப்பூர்வக் கொடியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.