2015-09-21 15:52:00

திருத்தந்தை, இளையோரிடம்- எதிர்காலம் பற்றி கனவு காணுங்கள்


செப்.21,2015. ஹவானா பேராலயத்தில் சந்திப்பை முடித்து, அப்பேராலயத்திற்கு அருகிலுள்ள அருள்பணி ஃபெலிக்ஸ் வரேலா கலாச்சார மையம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீட கலாச்சார அவையின் உதவியுடன் 2011ம் ஆண்டில் கட்டப்பட்ட இம்மையத்தில் மெய்யியல், இறையியல், சமூகவியல், உளவியல், வர்த்தக நிர்வாகம் என பல துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கருத்தரங்குகள், அருங்காட்சியகங்கள், இன்னும், ஹவானாவின் இலத்தீன் அமெரிக்க திரைப்பட விழாவும் இம்மையத்தில் இடம்பெறுகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான இளையோரைச் சந்தித்தார் திருத்தந்தை. முதலில் இம்மைய இயக்குனர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் ஓர் இளைஞர், தங்கள் நாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளையும், கனவுகளையும் திருத்தந்தையிடம் பகிர்ந்து கொண்டார். இந்தப் பகிர்வைக் கேட்டுக்கொண்டிருந்த திருத்தந்தை, இவர்களுக்கென தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், அந்நேரத்தில் தனது உள்ளத்தில் எழுந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். கனவு என்ற வார்த்தை என் மனதைத் தொட்டது. ஓர் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் சொல்வார்- மக்களுக்கு இரண்டு கண்கள் உண்டு, ஒன்று சதையால் ஆனது, மற்றொன்று கண்ணாடியால் ஆனது. சதையாலான கண்ணால் நாம் எதார்த்தத்தைப் பார்க்கிறோம், கண்ணாடியாலான கண்ணால் நம் கனவைப் பார்க்கிறோம் என்று. எனவே கனவு காணும் திறமையை நாம் அனுமதிக்க வேண்டும். கனவு காண்பதற்குச் சக்தியில்லாத இளையோர் தன்னிலே முடங்கிக் கிடப்பவராவார். எனவே கனவு காணுங்கள் என்ற திருத்தந்தை இளையோர் தங்கள் கனவுகளை உயிர்த்துடிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டுமென ஊக்குவித்தார். பிளவுபடுத்தும் காரியங்களில் கவனம் செலுத்தாமல் ஒன்றிணைக்கும் செயல்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பை நிறைவு செய்து அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீட தூதரகத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு இரவு உணவு உண்டார். இத்துடன் இஞ்ஞாயிறு நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

கியூபாவில் மூன்றாவது நாளாக, இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை 7.20 மணிக்குத் தனது பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஹவானா திருப்பீட தூதரகத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற விமான நிலையத்திற்குக் காரில் சென்று Holguin நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. ஒரு மணி, 20 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து Holguin புரட்சி வளாகம் சென்றார் திருத்தந்தை. அவ்வளாகத்தைத் திறந்த காரில் வலம்வந்து விசுவாசிகளை ஆசிர்வதித்துத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய இலங்கை நேரம் இத்திங்கள் இரவு 8 மணியாகும்.

கியூபா நாட்டு மக்கள், வரலாற்றில் காயப்பட்ட மக்கள். எனினும், அவர்கள் விரிந்த கரங்களுடன் மற்றவரை வரவேற்கவும், அவர்களோடு நம்பிக்கையுடன் நடந்து செல்லவும் தெரிந்தவர்கள் என்று திருத்தந்தை கூறியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்திருத்தூதுப்பயணம் கியூப மக்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை விசுவாசத்தில் ஆழப்படுத்தும் என நம்புவோம். அதற்காகச் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.