2015-09-21 14:27:00

அருள்பணியாளர், துறவியருடன் திருத்தந்தை மனம்திறந்த பகிர்வு


செப்.21,2015. நான் தயாரித்து வைத்திருந்த உரையைப் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை. ஏனெனில், கர்தினால் ஹைமே (Jaime) அவர்களும், சகோதரி யாய்லேனி (Sister Yaileny Ponce Torres, Daughter of Charity) அவர்களும் கூறிய வார்த்தைகள், நம்மைச் சிந்திக்க அழைகின்றன. இவ்விருவரும் இன்று இறைவாக்கினர்களாக நம் மத்தியில் வழங்கப்பட்டுள்ளனர்.

கர்தினால் ஹைமே அவர்கள், 'வறுமை' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினார். இந்த வார்த்தையை நாம் மீண்டும், மீண்டும் கேட்டு, நம் உள்ளத்தில் ஆழப் பதிக்கவேண்டும் என்று, இறைவன் விரும்புகிறார். தன்னையே வெறுமையாக்கி, வறுமைக்கோலம் பூண்ட இறைமகனை, இவ்வுலகம் மதிப்பதில்லை; அன்பு கூர்வதும் இல்லை.

இவ்வுலகக் கொடைகள் இறைவனிடமிருந்து வருவன; ஆனால், இக்கொடைகள் நம் உள்ளங்களை நிறைத்துவிட்டால், பின்னர், இறைவனுக்கு இடமின்றி போய்விடும்.

எனவேதான், வறுமை அல்லது ஏழ்மை என்ற துறவற வாக்குறுதி, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் தாய் என்றும், மதில் சுவர் என்றும், புனித இஞ்ஞாசியார் கூறினார்.

இயேசுவின் சீடர்கள், தங்கள் படகு, வலை அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தனர். உலகப் பொருள்களில் அல்ல; இயேசுவில் அவர்கள் நம்பிக்கை வைத்தனர்.

எனக்குத் தெரிந்த ஓர் அருள் பணியாளர், துறவற சபைகள் செல்வம் சேர்ப்பது பற்றி ஒருமுறை என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இவ்விதம் செல்வம் சேர்த்துவைக்கும் துறவறச் சபைகளில், நிதி விடயங்களை சரிவரப் பராமரிக்கும் திறனற்ற ஓர் அருள் பணியாளர், அச்சபையின் செல்வங்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இது, இறைவன் அவர்களுக்குப் பாடம் புகட்டும் வழியோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று, அருள் பணியாளர் கூறினார்.

"என்னிடம் ஏழ்மை என்ற பண்பு எந்நிலையில் உள்ளது?" என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் எழுப்பலாம். இறைமகன் இயேசு, மலைப்பொழிவில் 'பேறுபெற்றோர்' என்று வழங்கிய வரிசையில், 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்' என்பதை முதன் முதலாகக் கூறினார்.

மனநலம் குன்றிய குழந்தைகளுடன் தான் ஆற்றிவரும் பணிகள் குறித்து, அருள்சகோதரி பேசினார். 'மிகச் சிறியோராகிய இவர்களுக்குச் செய்ததையெல்லாம் எனக்கேச் செய்தீர்கள்' என்று இயேசு கூறியதை, இச்சகோதரியின் வாழ்வில் காண்கிறோம். இவ்வுலகத்தால் நிராகரிக்கப்பட்ட பலருக்கு, அருள் சகோதரிகள் அரும்பணியாற்றி, அதில் தங்களையே தியாகம் செய்து வருகின்றனர். இவர்கள் ஆற்றும் பணியை இவ்வுலகம் புரிந்துகொள்வதில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, இவர்கள் ஆற்றும் பணியை இவ்வுலகம் ஏளனம் செய்கிறது. அன்புச் சகோதரியே, உங்களுக்கும், இன்னும் உங்களைப் போல் உழைக்கும் பலருக்கும் நான் நன்றி சொல்கிறேன்.

நாளை நாம் புனித மத்தேயுவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். வரிவசூலித்துவந்த அவர், மக்களை ஏமாற்றி, பணம் பறித்தவர். ஆயினும், இயேசுவின் கருணை அவரை மீட்டது, சீடராக்கியது. அவர் வீட்டுக்கு இயேசு உணவருந்தச் சென்றபோது, மற்றவர்கள் இயேசுவைப் பழித்துரைத்தனர். ஆயினும், இயேசுவின் கருணை சிறிதும் குறையவில்லை.

சகோதர ஆயர்களே, அருள் பணியாளரே, துறவியரே, கருணைகாட்ட அஞ்ச வேண்டாம். இன்று நம்மிடையே பேசிய இரு இறைவாக்கினர்களுக்குச் செவிமடுத்தபின், எனக்குள் தோன்றுவது இதுதான்: நமது உள்ளங்களில் இவர்கள் விதைத்துள்ள ஏழ்மை, கருணை என்ற வரங்களை இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.