2015-09-20 15:58:00

விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தத் திருத்தந்தை


செப்.,20,2015. கியூபா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இம்மாதம் 19 சனிக்கிழமை முதல், 27ம் தேதி ஞாயிறு வரை திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  சனிக்கிழமையன்று, உள்ளூர் நேரம் காலை 10 மணி 35 நிமிடங்களுக்கு, அதாவது, இந்திய நேரம் 2 மணி 5 நிமிடங்களுக்கு உரோம் நகரின் ஃபியூமிச்சினோ விமான நிலையத்திலிருந்து கியூபா நோக்கி ஆலித்தாலியா விமானத்தில் புறப்பட்டார். அதற்கு முன்னர், வெள்ளி மாலை உரோம் நகரின் புனித மேரி மேஜர்  பசிலிக்கப் பேராலயம் சென்று அன்னை மரியிடம், தன் பயணத்தில் துணை நிற்குமாறு உருக்கமாகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விமானப் பயணத்தின்போது, சில நிமிடங்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து, தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார் திருத்தந்தை. முதலில், பத்திரிகையாளர் சார்பில், திருப்பீட தகவல் தொடர்பு மைய இயக்குனர், அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். எண்ணற்ற பத்திரிகையாளர்கள் திருத்தந்தையின் பயணத்தின்போது பின்தொடரும் அதே வேளையில், இங்கு இந்த விமானத்தில் 76 பேர் உங்களோடு வருகிறோம், என திருத்தந்தையை நோக்கிக் கூறிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், இவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர், அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார். உலகெங்கும் அமைதியை எடுத்துச்செல்லும் திருத்தந்தையின் ஆவல் குறித்து பத்திரிகையாளர்களின் பாராட்டையும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் வெளியிட்டார். இதற்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி இன்றையை உலகிற்கு எவ்வளவு தூரம் தேவை என்பதை வலியுறுத்தி,  இன்று போரால் மக்கள் அகதிகளாக வெளியேறுவதும், அடைக்கலம் தேடுவதுமான நிலைகளை நேரடியாகக் காணமுடிகிறது என்றார். வத்திக்கானிலுள்ள புனித அன்னாள் பங்குதளம், சிரியாவின் புலம்பெயர்ந்த இரு குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, தான் இப்பயணத்தை துவக்குவதற்கு முன்னால், இந்த இரு குடும்பங்களுள் ஒன்றை சந்தித்தபோது, அவர்களின் முகங்களில் தெரிந்த சோகத்தை, தன்னால் உணர முடிந்தது என்றார். உலகில் அமைதிக்காக ஒவ்வொருவரும் சிறு சிறு பாலங்களை எழுப்புங்கள், அந்த சிறு பாலங்கள் ஒன்றிணைக்கப்படும்போது, பெரிய பாலமாக உருவெடுக்கும் என்ற அழைப்பையும் பத்திரிகையாளர்களிடம் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.