2015-09-20 16:06:00

கியூபா விமானதளத்தில் திருத்தந்தைக்கு வரவேற்பு


செப்.,20,2015. இச்சனிக்கிழமை, கியூபா உள்ளூர் நேரம், மாலை 4 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் ஞாயிறு நள்ளிரவு 1.30 மணிக்கு, கியூபா நாட்டை சென்றடைந்த திருத்தந்தையை, அரசுத் தலைவர் ரவுல் காஸ்த்ரோவுடன் இணைந்து, அரசு அதிகாரிகளும், தலத்திரு அவை அதிகாரிகளும், பொது மக்களும் வரவேற்றனர். இத்தாலிக்கும் கியூபாவுக்கும் இடையே உள்ள 8,698 கிலோ மீட்டர் தூரத்தை, 11 மணி 45 நிமிடங்களில் கடந்து சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைநகர் ஹவானா விமான தளத்தை வந்தடைந்தபோது, கியூபா உள்ளூர் நேரம் மாலை 4 மணி. ஏனெனில், இத்தாலிக்கும் கியூபாவுக்கும் இடையே 6 மணி நேர வித்தியாசம் உள்ளது. கியூபாவிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் ஜியார்ஜியோ லிங்குவா அவர்கள், விமானத்திற்குள் ஏறி திருத்தந்தையை வரவேற்று வர, திருத்தந்தை வெளியே வந்ததும், இரு சிறு குழந்தைகள் முன்வந்து திருந்தந்தைக்கு மலர் கொத்துக்களை அளித்து வரவேற்றனர்.  அரசுத் தலைவர் ரவுல் காஸ்த்ரோவும், ஹவானா பேராயர் ஹைமே ஒர்த்தெகா அலமினோவும் திருத்தந்தையுடன் கைகுலுக்கி வரவேற்க, விமானதளத்திலேயே அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில், திருத்தந்தையும் அரசுத்தலைவரும் நிற்க, வத்திக்கான் மற்றும் கியூபா தேசியப் பண்கள் இசைக்கப்பட்ட பின்னர், ஒரு நாட்டின் அரசுத்தலைவர் என்ற முறையில், திருத்தைக்கு, 21 பீரங்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், அரசுத்தலைவர் ரவுல் காஸ்த்ரோ திருத்தந்தையை வரவேற்று தன் உரையை வழங்கினார். அரசுத்தலைவரின் உரைக்கு செவிமடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்கான தன் முதல் உரையை  வழங்கினார்.

திருத்தந்தையின் உரைக்குப் பின், அங்கு குழுமியிருந்த முக்கிய அரசு அதிகாரிகளும், திருப்பீட அதிகாரிகளும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். அவர்களுடன் சில நிமிடங்களை செலவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்த வரவேற்பு அறை நோக்கிச் சென்றார். அதற்கு முன்னர், அவருக்கு அரசுத் தலைவருக்குரிய இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. அந்த வரவேற்பறையில் திருத்தந்தையும் அரசுத்தலைவர் ரவுல் காஸ்த்ரோவும் சிறிது நேரம் கலந்துரையாடினர்.

சனி மாலை தலைநகர் ஹவானா சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறத்தாழ 12 மணி நேர பயணக்களைப்பில் இருந்ததால், அன்று வேறு எந்த பொது நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. விமான தளத்திலிருந்து திறந்த காரில் நின்றுகொண்டே தலைநகரின் திருப்பீட தூதரக இல்லம் நோக்கி பயணம் செய்தார் திருத்தந்தை. திருப்பீடத்திற்கும் விமான தளத்திற்கும் இடையேயான 18 கிலோமீட்டரை திருத்தந்தை காரில் மெதுவாக கடந்து சென்றபோது, சாலையின் இருமருங்கிலும் கூடியிருந்த மக்கள் தங்கள் கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளியிட்டனர். சாலை இருமருங்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலங்காரங்களையும், மக்களின் ஆரவாரங்களையும் பார்த்தபோது, திருத்தந்தை ஒரு கம்யூனிச நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டு வருகிறர் என்பது நம்புவதற்கு கடினமான ஒன்றாக இருந்தது. ஏறத்தாழ உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு ஹவானாவின் திருப்பீடத் தூதரகத்தை வந்தடைந்த திருத்தந்தை, அங்கேயே இரவு உணவருந்தி, நித்திரையிலாழ்ந்தார். இத்துடன் அவரது சனிக்கிழமை பயணத்திட்டங்கள் நிறைவுக்கு வந்தன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.