2015-09-20 16:23:00

கியூபா நாடு – ஒரு கண்ணோட்டம்


செப்.,20,2015. கரிபியன் தீவு நாடான கியூபா, வட கரிபியன் கடலில், கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் பஹாமாசுக்கும் தெற்கிலும், ஹெய்ட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசுக்கு மேற்கிலும் மெக்சிகோவுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது கியூபா. தெற்கில் கேமன் தீவுகளும் ஜமேக்காவும் அமைந்துள்ளன. ஹவானா கியூபாவின் தலைநகராகவும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. இரண்டாவது பெரும் நகரமாக கூபாவின் சான்டியாகோ உள்ளது. கியூபா 1கோடியே 12 இலட்சத்து 42 ஆயிரம் மக்கள் தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிகவும் பெரிய தீவாக உள்ளது  பன்முக இன மக்கள் வாழும் கூபாவில், தாயகப் பழங்குடியினரின் பண்பாடும் வழக்கங்களும், இஸ்பானிய குடியேற்றதாரர்கள், மற்றும் ஆப்ரிக்க அடிமைகளின் பழக்கங்களும் ஒருங்கிணைந்த பண்பாட்டைக் கொண்டுள்ளது.

கியூபா ஒரு கம்யூனிச நாடாக இருக்கின்றபோதிலும் அங்குள்ள மக்களுள் 60.5 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.  18 ஆயிரத்து 562 கத்தோலிக்கர்களுக்கு ஓர் அருள்பணியாளர் என்ற விகிதத்தில், 365 அருள்பணியாளர்கள் இந்நாடில் பணிபுரிகின்றனர். 11 மறைமாவட்டங்கள், 17 ஆயர்கள், 283 பங்கு தளங்கள், 624 அருள் சகோதரிகள்,  4395 வேதியர்கள் என பலம் பொருந்திய திரு அவையாக கியூப திரு அவை தொடர்ந்து தன் பணிகளை ஆற்றி வருகின்றது. 6 கல்வி நிலையங்களையும் 6 பிறரன்பு மற்றும் சமூகப்பணி மையங்களையும் இந்நாட்டில் நடத்தி வருகின்றது திரு அவை. இதில் அன்னை தெரசாவின் பிறரன்பு சகோதரிகள் சபையின் மையங்களும் அடங்கும். கியூபாவிற்கு வரும்படி அப்போதைய கியூப அதிபர் பிதல் காஸ்த்ரோவே அன்னை தெராசாவை 1986ம் ஆண்டு அழைத்திருந்தார்.

தற்போது திருத்தந்தை கியூபாவில் மேற்கொள்ளும் திருப்பயணம், அந்நாட்டில் திருத்தந்தை ஒருவர் மேற்கொள்ளும் மூன்றாவது திருப்பயணமாகும். ஏற்கனவே திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்கள், 1998ம் ஆண்டு சனவரி மாதத்திலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திலும் திருப்பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.