2015-09-19 15:40:00

திருத்தந்தை துவக்கிய கியூபா,அமெரிக்க ஐக்கிய நாடு திருப்பயணம்


செப்.,19,2015. கியூபா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரு நாடுகளிலும் நிகழும் திருத்தூதுப் பயணத்தை, இச்சனிக்கிழமையன்று, உரோம் நகரிலிருந்து துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உள்ளூர் நேரம் காலை 10 மணி 35 நிமிடங்களுக்கு, அதாவது, இந்திய நேரம் 2 மணி 5 நிமிடங்களுக்கு உரோம் நகரின் ஃபியூமிச்சினோ விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் கடந்து சென்ற இத்தாலி, பிரான்ஸ், இஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற நாடுகளுக்கு வாழ்த்து தந்திச் செய்திகளை அனுப்பிய வண்ணம் சென்றார்.

இச்சனிக்கிழமை, கியூபா உள்ளூர் நேரம், மாலை 4 மணி முதல், செவ்வாய் நண்பகல், உள்ளூர் நேரம் 12.30 வரை கியூபாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செவ்வாய் பிற்பகல் முதல், ஞாயிறு மாலை, உள்ளூர் நேரம் 8 மணி வரை அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட பின், திங்களன்று உரோம் நகர் திரும்புவார்.

கியூபாவில், துறவத்தார், இளையோர், குடும்பங்கள், என ஒவ்வொரு குழுவையும் தனித்தனியாக சந்திப்பதுடன், அரசு அதிகாரிகளையும் சந்தித்து உரையாட உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு பயணத்தின்போது, வாஷிங்டன் பேராலயத்தில், அருளாளர் ஜுனிபெரோ செர்ரா (Junipero Serra) அவர்களை புனிதராக அறிவிக்கும் திருப்பலியை நிறைவேற்றுவார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரஸ் அவையில் உரையாற்றுதல், ஐ.நா. நிறுவனத்தில் உரை நிகழ்த்துதல், ஃபிலடெல்பியாவில் இடம்பெறும் குடும்பம் குறித்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கு பெறுதல் போன்றவை அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளும் 10வது திருத்தூதுப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளாகும். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.