2015-09-19 15:56:00

தற்கொலைக்கு வழிகாட்டுவது, நன்னெறியாகாது - கனடா ஆயர்கள்


செப்.19,2015. மனித மாண்பைக் காப்பதிலும், நோயுற்றோரையும், சமுதாயத்தில் நலிந்தோரையும் காப்பதிலும் கனடா நாடு இதுவரை கொண்டிருந்த பாரம்பரியத்தை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம் என்று, கனடா நாட்டு ஆயர்கள், இவ்வெள்ளியன்று, அறிக்கையொன்றை வெளியிட்டனர்.

தற்கொலைக்கு உதவி செய்யும் உரிமையை நிலைநாட்டி, கனடா நாட்டு உச்சநீதி மன்றம் எடுத்துள்ள முடிவு, தங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது என்று கூறும் கனடா ஆயர்கள், இந்த முடிவுக்கு தாங்கள் ஒருபோதும் ஒத்திணங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

வாழ்வின் சிக்கல்களைச் சந்திப்போருக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் தருவதை விட்டுவிட்டு, அவர்களை தற்கொலைக்கு வழிகாட்டுவது, எக்காலத்திலும் நன்னெறியாகாது என்பதை, ஆயர்களின் அறிக்கை வலியுறுத்துகிறது.

நெருங்கிவரும் தேர்தலில் போட்டியிட விழையும் வேட்பாளர்கள் யாரும் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்காமல், மௌனம் காப்பது, பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது என்றும் ஆயர்களின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த முடிவை சட்டமாக்க, உச்சநீதி மன்றம் அளித்திருக்கும் ஓர் ஆண்டு காலம் என்பது மிகக் குறுகிய காலம் என்பதைச் சுட்டிக்காட்டும் கனடா ஆயர்கள், அக்டோபர் 19ம் தேதி ஆட்சியமைக்கும் கட்சியினர், இந்த முடிவை நிராகரிக்கும் வண்ணம், கிறிஸ்தவ மக்கள் தங்கள் வேட்பாளர்களிடம் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும்  விண்ணப்பித்துள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.