2015-09-19 16:10:00

அனைத்துலக விசாரணை கோரி கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கடிதம்


செப்.,19,2015. அனைத்துலக விசாரணை மட்டுமே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தரும் என வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் இணைந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இக்கடிதத்தில் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ள மட்டக்கிளப்பு ஆயர், ஜோசப் பொன்னையா அவர்கள், கடந்த கால வன்முறைகள் குறித்து நாட்டிற்குள்ளேயே உருவாக்கப்பட்ட விசாரணை அமைப்புகள், எவ்வித பலனையோ, தீர்வையோ தரவில்லை என்ற கவலையை தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை இல்லாமல் அமைதி ஏற்படாது, அந்த அமைதி ஏற்பட, நீதி வழங்கப்பட வேண்டும் என, இது குறித்து பி.பி.சி. வானொலியில் கருத்து தெரிவித்த திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அவர்கள், சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே நீதி வழங்கப்பட முடியும் என, தாங்கள் நம்புவதாகவும் கூறினார்.

உள்நாட்டு விசாரணை முறையாக நடைபெறாது என்பதே, தங்களது எண்ணமாக உள்ளது என்றும் கூறிய திருகோணமலை மறைமாவட்ட ஆயர்,  அனைத்துலக விசாரணை நடைபெறும்போதுதான், அது பாரபட்சமற்றதாக இருக்கும் என்றும், அது பொறுப்புக்கூறல் மற்றும் நீதிவழங்குவதற்கு உதவும் எனவும் தெரிவித்தார்.

சாட்சிகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படுவது மிகவும் அவசியம் என்றும், அது இல்லாவிடில் விசாரணை, உரிய பலனை அளிக்காது எனவும் திருகோணமலை ஆயர் தெரிவித்தார். 

ஆதாரம் :  UCAN/BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.