2015-09-18 15:45:00

மறையுண்மையைத் தியானிக்க வான்வெளி தரும் அழைப்பு


செப்.18,2015. இறைவனின் மறையுண்மையை தியானிக்க நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கொடையாக வான்வெளியை நாம் காணவேண்டுமே தவிர, அறிவியல் பிரச்சனையாக அதை காணக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த வான்வெளி ஆர்வலர்களிடம் கூறினார்.

வத்திக்கான் வான்வெளி ஆய்வுக்கூடம், தன் 80வது ஆண்டு நிறைவையொட்டி, செப்டம்பர் 14, இத்திங்கள் முதல், 18, இவ்வேள்ளி முடிய உரோம் நகருக்கு அருகே உள்ள காஸ்தல் கந்தோல்ஃபோ எனுமிடத்தில் அமைந்துள்ள தன் ஆய்வுக்கூடத்தில் ஒரு பன்னாட்டு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

இக்கருத்தரங்கில் பங்கேற்ற பன்னாட்டு உறுப்பினர்களை, இவ்வெள்ளி காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இந்த வான்வெளி ஆய்வுக்கூடத்தை நிறுவி, அதை இயேசு சபையினரிடம் ஒப்படைத்த திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களை, தன் உரையில் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

1935ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், இந்த வான்வெளி ஆய்வுக் கூடத்தை திறந்துவைத்தபோது, "படைப்பாளியான நம் இறைவனை வணங்குவோம், வாருங்கள்" ("Deum Creatorem come adoremus") என்ற வார்த்தைகள் அடங்கிய ஒரு பளிங்கு வில்லையை இக்கூடத்தில் பொருத்தினார் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

விண்ணையும், விண்மீன்களையும் காணும்போதெல்லாம், அவற்றைப் படைத்த இறைவனுக்குப் பணியாற்றவேண்டும் என்ற ஆவல் தனக்குள் எழுகிறது என்று, புனித லொயோலா இஞ்ஞாசியார் சொன்ன கருத்தையும், திருத்தந்தை, இச்சந்திப்பின்போது, எடுத்துரைத்தார்.

அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்க, வத்திக்கான் வான்வெளி ஆய்வுக்கூடம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.