2015-09-18 16:44:00

திருத்தந்தையை வரவேற்க வாஷிங்டன் தயார் - கர்தினால் Wuerl


செப்.18,2015. "மகிழ்வைப் பகிர்வோம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் நடப்போம்" என்பது, வாஷிங்டன் நகரில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்காக இருந்துவருகிறது என்று வாஷிங்டன் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் டானல்ட் வேர்ல் (Donald Wuerl) அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 22,23,24 ஆகிய நாட்களில், வாஷிங்டன் நகரில், திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்திற்கு, அம்மறைமாவட்டம் எவ்வகையில் தயாரித்து வந்துள்ளது என்பதை, கர்தினால் வேர்ல் அவர்கள், ஒரு கட்டுரையாக, L'Osservatore Romano என்ற வத்திக்கான் நாளிதழில் வெளியிட்டுள்ளார்.

கல்வி நிலையங்கள், பங்குத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்ற பல்வேறு நிலைகளில், திருத்தந்தையின் பயணம் குறித்து கடந்த சில மாதங்கள் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று, கர்தினால் வேர்ல் அவர்கள், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

"பிரான்சிஸ் உடன் நடப்போம்" (#WalkwithFrancis) என்ற சமூக வலைத்தள முயற்சியில், கிறிஸ்தவர் அல்லாதோரும் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர் என்று கர்தினால் வேர்ல் அவர்கள் கூறியுள்ளார்.

அருளாளர் ஜுனிபெரோ செர்ரா அவர்களின் புனிதர் பட்ட நிகழ்வில், இவ்வுலகின் பல நாட்டு மக்களும் கலந்துகொள்வர் என்று கூறிய கர்தினால் வேர்ல் அவர்கள், அருளாளர் செர்ரா அவர்கள் பயன்படுத்திய ஸ்பானிய மொழியில், புனிதர் பட்ட திருப்பலி பெரும்பாலும் அமையும் என்றும், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.