2015-09-18 15:53:00

திருத்தந்தையுடன் ஐரோப்பிய அவை பாராளுமன்றத் தலைவர்


செப்.18,2015. ஐரோப்பிய அவை பாராளுமன்றத்தின் தலைவர் Anne Brasseur அவர்கள், இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில், திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினார்.

ஏறத்தாழ 30 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின்போது, ஐரோப்பிய கண்டம் எதிர்நோக்கிவரும் குடியேற்றதாரர் பிரச்சனை, மத்தியக் கிழக்குப் பகுதியின் பதட்ட நிலைகள், புலம்பெயர்ந்தோர் வரவேற்பு போன்றவை விவாதிக்கப்பட்டன.

திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடத்தின் உயர் மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார் ஐரோப்பிய அவை பாராளுமன்ற தலைவர் Brasseur அவர்கள்.   

இதற்கிடையே, இவ்வியாழனன்று காலை, திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார், லக்ஸம்பர்க் பிரதமர் Xavier Bettel.

திருத்தந்தையுடன் மேற்கொண்ட தனிப்பட்ட சந்திப்புக்குப் பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் Paul Richard Gallagher ஆகியோரையும் சந்தித்து உரையாடினார் பிரதமர்.

திருப்பீடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்புகளின்போது, லக்ஸம்பர்க் நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்தும், மத சுதந்திரம், மற்றும், சமூக இணக்க வாழ்வில் ஆன்மீக மதிப்பீடுகளின் இடம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிப்பு அவையின் தலைமைப் பொறுப்பில், தற்போது லக்ஸம்பர்க் நாடு இருப்பதால், உலகின் தற்போதைய மோதல்கள் குறித்தும், குடியேற்றதாரர் பிரச்சனை குறித்தும், மத சிறுபான்மையினர் சித்ரவதைப்படுத்தப்படுவது குறித்தும், திருப்பீட அதிகாரிகளுக்கும் பிரதமர் Xavier Bettelக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.