2015-09-18 16:55:00

ஆன்மாக்களின் மேய்ப்பராக அமெரிக்கா செல்லும் திருத்தந்தை


செப்.18,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆன்மாக்களின் மேய்ப்பராகப் பேசுகிறாரே தவிர, ஒரு பொருளாதார நிபுணராகவோ, அரசியல்வாதியாகவோ பேசுவதில்லை என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவைத் தலைவர், பேராயர், ஜோசப் கர்ட்ஸ் (Joseph Kurtz) அவர்கள், ZENIT கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

குடும்பம், திருமணம் ஆகிய நிலைகளைக் குறித்து, கத்தோலிக்கத் திருஅவை, சொல்லித்தரும் அடிப்படை கொள்கைகளை மக்களுக்கு உணர்த்துவதே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு வருவதன் முக்கிய நோக்கமே தவிர, அமெரிக்க மக்களுக்கு பொருளாதாரக் கொள்கைகளை வழங்குவது அல்ல என்று, பேராயர் கர்ட்ஸ் அவர்கள், இப்பேட்டியில் தெளிவுபடுத்தினார்.

இரு வாரங்களுக்கு முன், செயற்கைக்கோள் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று நகரங்களில் கூடியிருந்த மக்களுடன் உரையாற்றியபோது, அவர் ஒரு மேய்ப்புப்பணியாளராக, இறைவாக்கினராக அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு வருகிறார் என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளார் என்று கூறிய பேராயர் கர்ட்ஸ் அவர்கள், திருத்தந்தையின் இந்த நிலைப்பாடே, அமெரிக்க கத்தோலிக்கர்களுக்கு நம்பிக்கை தருகிறது என்று எடுத்துரைத்தார்.

இயேசு கிறிஸ்துவிலிருந்து விலகி, மக்களின் கவனம் அனைத்தும் தன் மீது திரும்புவதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பவில்லை என்பதை, பலமுறை அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் கர்ட்ஸ் அவர்கள், இந்தத் திருத்தூதுப் பயணத்திலும் தன்னைவிட, கிறிஸ்துவின் மீது மக்களின் கவனம் திரும்புவதையே திருத்தந்தை விரும்புவார் என்பதை, தன் பேட்டியில் தெளிவாக்கினார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.