2015-09-17 16:48:00

'வாழ்வை மதிக்கும் மாதம்' - கர்தினால் O'Malley செய்தி


செப்.17,2015. நோயுற்று வாடும் வயதானவர் ஒருவர், கருவில் குறையுடன் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படும் குழந்தை, மனநலம் குன்றிய ஒரு சிறுவன், குணமாக்கமுடியாத புற்றுநோயில் வாடும் ஒரு தாய் ஆகிய ஒவ்வொருவரும் வாழ்வதற்குத் தகுதியுள்ளவர்களே என்று அமெரிக்க கர்தினால், Sean O'Malley அவர்கள், செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம், 'வாழ்வை மதிக்கும் மாதம்' அமெரிக்கத் தலத்திருஅவையால் கடைபிடிக்கப்படுவதையொட்டி, அமெரிக்க ஆயர் பேரவையின் வாழ்வுக்கு ஆதாரம் தரும் பணிக்குழுவின் தலைவரான கர்தினால் O'Malley அவர்கள், செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

ஒருவர் செய்து முடிக்கும் சாதனைகளைக் கொண்டு வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும் போக்கு வளர்ந்துள்ள இன்றைய உலகில், கடவுள் வழங்கும் மனிதம் என்பதே ஒவ்வோர் உயிருக்கும் பிறப்பில் தரப்படும் மதிப்பு என்பதை நாம் உணரவேண்டும் என்று, கர்தினால் O'Malley அவர்களின் செய்தி வலியுறுத்துகிறது.

" ஒவ்வோர் உயிரும் வாழத் தகுதியுள்ளது" என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 'வாழ்வை மதிக்கும் மாதத்'திற்கென வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில், கருக்கலைப்பு, மற்றும் வாழ்வின் இறுதி நேரத்தில் இருப்போருக்கு பராமரிப்பு என்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

1972ம் ஆண்டு முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையில், 'வாழ்வை மதிக்கும் மாதம்' கொண்டாடப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறு, வாழ்வை மதிக்கும் ஞாயிறு என்று சிறப்பிக்கப்படுகிறது. 

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.