2015-09-17 16:07:00

வன்முறைகளுக்கு வன்முறைகளே பதிலாக அமைவது, அழிவு - திருத்தந்தை


செப்.17,2015. சிரியா, ஈராக் ஆகிய இரு நாடுகளில் நிகழ்ந்து வரும் மோதல்களால், சாதாரண மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாவதும், பழமை வாய்ந்த கலாச்சார கருவூலங்கள் அழிவுக்கு உள்ளாவதும் அண்மைய காலங்களில் இவ்வுலகம் கண்டுள்ள மிகப் பெரும் கொடுமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும், 'Cor Unum' என்ற அவை, வத்திக்கானில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் பிறரன்புப் பணி அமைப்புக்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தன் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.

முன்பு எக்காலத்திலும் இல்லாத அளவு, இன்றைய மோதல்களில் வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதை அனைவரும் அறியும் வகையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன என்று கூறியத் திருத்தந்தை, வன்முறைகளுக்கு, வன்முறைகளே பதிலாக அமைந்தால், புதிய காயங்கள் மட்டுமே உருவாக முடியும் என்று எடுத்துரைத்தார்.

மோதல்கள் நிகழும் சூழல்களுக்கு நடுவே துணிந்து பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களைப் பாராட்டியத் திருத்தந்தை, இச்சூழல்களில், குழந்தைகள் மீது தனிக் கவனம் செலுத்துவதை குறைக்கவோ, நிறுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

கட்டுக்கடங்காமல் வளர்ந்து வரும் இத்துன்பங்களைத் துடைப்பதில், மதம், கொள்கை, அரசியல் என்ற பல எல்லைகளைத் தாண்டி, அனைத்து நல்மனம் கொண்டோரும் இணைந்து உழைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என்பதையும், திருத்தந்தை, பன்னாட்டு உறுப்பினர்களுக்கு தன் உரையில் நினைவுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.