2015-09-17 16:37:00

மூன்று திருத்தந்தையரை வரவேற்கும் பேறு பெற்ற ஹவானா


செப்.17,2015. மூன்று திருத்தந்தையரை வரவேற்கும் பாக்கியம் பெற்ற ஒரே பேராயர் நானாகத்தான் இருப்பேன் என்று, கியூபா நாட்டின் ஹவானா பேராயர், கர்தினால் Lucas Ortega y Alamino அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இருவரும் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட ஹவானாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்னும் சில நாட்களில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது, கியூபா நாட்டிற்குக் கிடைத்த பெரும் வரம் என்று கர்தினால் Ortega அவர்கள் குறிப்பிட்டார்.

பொருளாதார, அரசியல், மற்றும் சமுதாயக் காரணங்களால், கியூபா நாட்டில் திருத்தந்தையர் வரமுடியாதச் சூழல் 90களில் நிலவி வந்தது என்று குறிப்பிட்ட கர்தினால் Ortega அவர்கள், கம்யூனிசத்தை தன் நாட்டில் முறியடித்த திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல், 1998ம் ஆண்டு, கியூபா நாட்டிற்கு வந்தது, தங்கள் நாட்டு வரவாற்றில் ஒரு மைல் கல் என்று கூறினார்.

முன்னாள் திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் பணிக்காலத்தின் இறுதி ஆண்டான 2012ம் ஆண்டில் மேற்கொண்ட இரு திருத்தூதுப் பயணங்களில் கியூபா நாடும் ஒன்று என்பது தங்களுக்குக் கிடைத்த தனியொரு வரம் என்று கர்தினால் Ortega அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

உலகின் கவனத்தைப் பெறாத, சரயேவோ, இலங்கை, அல்பேனியா போன்ற பல நாடுகளை, தன் திருத்தூதுப் பயணங்களுக்காகத் தேர்ந்தெடுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மறைபரப்புப் பணியாளராக தங்கள் சிறு நாட்டையும் தேர்ந்தெடுத்திருப்பது, கியூபா மக்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது என்று கர்தினால் Ortega அவர்கள் வத்திகான் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.