2015-09-17 16:45:00

புனித பூமியில் திருப்பயணம் - ஒருமைப்பாட்டின் அடையாளம்


செப்.,17,2015. புனித பூமியில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக செபிப்பதுடன், அவர்கள் வாழும் பகுதிகளில் திருப்பயணம் மேற்கொண்டு, தங்கள் பிறரன்பு நடவடிக்கை வழியாக அம்மக்களுக்கு கிறிஸ்தவர்கள் உதவவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆயர்கள்.

இயேசு வாழ்ந்த இடங்களில் இன்று வாழும் கிறிஸ்தவர்களுக்கு, ஏனைய நாடுகளின் கிறிஸ்தவர்கள், ஒருமைப்பாட்டையும் இணக்கவாழ்வையும் காட்டவிரும்பினால், அப்பகுதிக்கு திருப்பயணம் மேற்கொள்வதே சிறந்த வழியாக இருக்கும் என தெரிவித்தனர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் வின்சென்ட் நிக்கொல்ஸ் மற்றும் அயர்லாந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர், ஈமோன் மார்ட்டின்.

புனித பூமியின் கலிலேயா மற்றும் எருசலேம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற ஐரோப்பிய ஆயர் பேரவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் இவ்விரு பேரவைத் தலைவர்களும் இவ்வாறு கூறினர்.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் அரசுத்தலைவர்களை ஐரோப்பிய ஆயர்கள் சந்தித்தபோது, மத்தியக் கிழக்கின் கிறிஸ்தவர்கள் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அப்பகுதியின் கிறிஸ்தவர்களை நேரில் சந்தித்து அவர்களின் உண்மை நிலைகளை அறியும் வாய்ப்பு தங்களுக்கு கிட்டியதாகவும் தெரிவித்தார் கர்தினால் நிக்கொல்ஸ்.

பிறரன்பு, விருந்தோம்பல், விசுவாசம், நம்பிக்கை என்ற கிறிஸ்தவ பண்புகளைத் தாங்கி, அப்பகுதி கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தாலும்,  அமைதி, நிலையான தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சத்தில் அவர்கள் இருப்பதைக் காணமுடிகிறது என மேலும் கூறினார் இங்கிலாந்து கர்தினால்.

நாசரேத்தில், அரசின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதால், குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இஸ்ரேலுக்கும், காஸா பகுதிக்கும் இடையே எழுப்பப்பட்டு வரும் பிரிவினைச்சுவர் குறித்தும் மக்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர் என்றும் ஐரோப்பிய ஆயர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.