2015-09-17 16:20:00

புதிய திருப்பேராயங்களை உருவாக்க கர்தினால்கள் பரிந்துரை


செப்.,17,2015. இவ்வாரத் துவக்கத்தில் திருத்தந்தையின், ‘கர்தினால்கள் ஆலோசனை அவை’ திருத்தந்தையுடன் நடத்திய 3 நாள் கூட்டத்தில், திருப்பீடத்தில் புதிதாக இரு திருப்பேராயங்களை உருவாக்குவது குறித்த உரையாடல்கள் தொடர்ந்ததாக, திருப்பீடப் பேச்சாளர் அறிவித்தார்.‘கர்தினால்கள் ஆலோசனை அவை’ திருத்தந்தையுடன் நடத்திய கூட்டத்தில், புதிதாக இரு திருப்பேராயங்களை உருவாக்குவது குறித்த பேச்சுக்கள் நடந்தன - திருப்பீடப் பேச்சாளர்.

'பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு’ குறித்த விவகாரங்களை ஏற்று நடத்துவதற்கென ஒரு புதிய பேராயத்தை உருவாக்குவது குறித்தும், 'பிறரன்பு, நீதி, அமைதி' ஆகிய பணிகளுக்கென ஒரு புதிய பேராயத்தை உருவாக்குவது குறித்தும் C9 எனப்படும் கர்தினால்கள் ஆலோசனை அவை விவாதங்களைத் தொடர்ந்ததாகவும், இதன் வழியாக, பல திருப்பீட அவைகளை ஒரே பேராயத்தின் கீழ் கொணரும் முயற்சி இடம்பெறுவதாகவும் திருப்பீடப் பேச்சாளர் இயேசுசபை அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் தெரிவித்தார்.

திருப்பீடத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொடர்புச் செயலகத்தின் தலைவர் அருள்பணி தாரியோ விகானோ அவர்கள், திருப்பீடத்தில் இதுவரை தனித்தனியாக செயலாற்றி வந்த ஒன்பது சமூகத்தொடர்பு நிறுவனங்களையும் ஒன்றிணைப்பது குறித்த தன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முன்வைக்க, அது குறித்தும் இந்த மூன்று நாள் கூட்டத்தில் திருத்தந்தையுடன் விவாதித்தனர் கர்தினால்கள். 

மேலும், இன்றைய உலகின் சவால்களை கருத்தில்கொண்டு, ஆயர்களை நியமிக்கும் வழிமுறைகள் குறித்தும், திருஅவை பணியாளர்களால், பாலினக் கொடுமைகளுக்கு உள்ளானவர்களுக்கு நீதி கிடைக்கும் நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் கர்தினால்கள் விவாதித்தனர்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்களுடன் இணைந்து உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 9 கர்தினால்களைக் கொண்ட இந்த ஆலோசனை அவையில் இம்முறை, உடல் நிலை காரணமாக, ஹொண்டுராஸ் கர்தினால் Oscar Rodriguez Maradiaga அவர்கள்  கலந்து கொள்ளவில்லை.

C9 கர்தினால்கள் ஆலோசனை அவையின் அடுத்தக் கூட்டம், டிசமபர் மாதம் 10 முதல் 12 வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.