2015-09-17 15:55:00

தெருக்களில் கைவிடப்பட்ட குழந்தைகள் குறித்து திருத்தந்தை கவலை


செப்.17,2015. தெருக்களில் வாழும் மனிதர்களும், சிறுவர்களும் எண்ணிக்கைகளோ, பொருள்களோ அல்ல, அவர்கள் ஒவ்வொருவரும், பெயரும், முகமும் கொண்ட மனிதப் பிறவிகள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, தன்னை திருப்பீடத்தில் சந்திக்க வந்திருந்த ஒரு குழுவினரிடம் கூறினார்.

குடிபெயர்ந்தோர் மற்றும் பயணம் மேற்கொள்வோர் மேய்ப்புப் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவை, கடந்த ஐந்து நாட்களாக உரோம் நகரில் நடத்திய ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட பன்னாட்டு உறுப்பினர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தெருக்களில் வாழ்வோர், குறிப்பாக, தெருக்களில் கைவிடப்பட்ட குழந்தைகள் குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

தங்கள் குழந்தைப் பருவத்தைத் தொலைத்துவிடும் வகையில் தெருக்களில் அலையும் சிறுவர், சிறுமியர், அந்த நிலையை அவர்களாகவே தெரிவு செய்யவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவர்களில் பலர் குற்றத்தொழிலுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும் உள்ளாவது பெரும் வேதனையைத் தருகிறது என்று குறிப்பிட்டார்.

சமுதாயத்தின் பல்வேறு கொடுமைகளை ஆய்வு செய்து, அவற்றிற்கு தீர்வு காண விழையும் விருப்பத்துடன் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருக்கும் அனைவரையும் தான் வாழ்த்துவதாகவும், ஆசீர் வழங்குவதாகவும் திருத்தந்தை தன் உரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.