2015-09-16 16:32:00

மனிதகுலத்தின் பரம்பரைச் சொத்து, சுற்றுச்சூழல் - திருத்தந்தை


செப்.16,2015. சுற்றுச்சூழல் என்பது, மனிதகுலத்திற்கு பொதுவில் வழங்கப்பட்டுள்ள ஒரு பரம்பரைச் சொத்து; எனவே, இதை காப்பது அனைவருக்கும் உள்ள கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் காலையில் தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு அமைச்சர்களிடம் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இப்புதன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்த வேளையில், சுற்றுச்சூழலுக்கென்று ஒரு தனித்துறையை, அண்மைய ஆண்டுகளில் அரசுகள் உருவாக்கியிருப்பதே, அதன் முக்கியத்துவத்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறது என்று திருத்தந்தை கூறினார்.

இவ்வாண்டின் இறுதியில் பாரிஸ் மாநகரில் Cop21 என்ற பெயருடன் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் உலக உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் தன்னைச் சந்திக்க விழைந்ததை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இப்பிரச்சனையில் அவர்கள் காட்டும் ஆர்வத்திற்கு தன் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது வறியோரே என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, சுற்றுச்சூழல் சீரழிவையும், வறுமையையும் இணைத்துச் சிந்திப்பது அனைத்து அரசுகளின் கடமை என்று வலியுறுத்தினார்.

வளர்ந்துவிட்ட, மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கிடையே, இயற்கை வழங்கும் சக்திகளைப் பயன்படுத்தும் அளவில் நிலவவேண்டிய நீதியான சமத்துவம் குறித்தும், திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

சமுதாயத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ள மக்களையும் இணைத்து முடிவுகள் எடுப்பது, அனைவருக்கும் பாதுகாப்பான இயற்கையை உருவாக்கும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைச்சர்களுக்கு தன் மூன்றாவது கருத்தாகக் கூறினார்.

பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ள Cop21 உலக உச்சி மாநாட்டிற்கு அனைத்து அரசுகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகளை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்ற வாழ்த்துடன் திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.