2015-09-15 15:51:00

திருத்தந்தை : இறைவனை நெருங்கி வருவதற்கு நோய்களும் ஒரு வழி


செப்.,15,2015. மனித குலத்தின் துன்பங்கள் மற்றும் நோய்களுக்கு விடை தேட முயலும் மக்களுக்கு, இறைவன் மீது கொள்ளும் நம்பிக்கை, ஆழமான ஓர் அர்த்தத்தைக் கண்டுணர உதவுகின்றது என, தன் நோயாளர் உலக தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி, லூர்து அன்னை திருவிழாவின்போது, திருஅவையில் சிறப்பிக்கப்பட உள்ள 24வது நோயாளர் உலக தினத்திற்கு செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, விசுவாசம் என்பது நோய்களையோ, அவை தரும் துன்பங்களையோ அகற்றுவதில்லை, மாறாக, அவை குறித்த ஆழமான அர்த்தத்தைக் கண்டுகொள்ள உதவுகின்றது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

கானாவூர் திருமணத்தின்போது, இரசம் தீர்ந்துவிட்ட நிலையில், அன்னை மரி, பணியாட்களை நோக்கி, 'அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' எனக் கூறிய வார்த்தைகளை, தன் செய்தியின் மையப்பொருளாக எடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் மீது அன்னை மரியா, எவ்வாறு அக்கறையுடையவராக இருந்தாரோ, அதுபோல் இன்று, நோயாளிகளிடையே பணிபுரிவோரும், நோயாளிகளின் தேவைகளை உணர்ந்து, அன்புடன் செயலாற்றவேண்டும் என தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

'அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என பணியாட்களிடம் சொல்வதன் வழியாக, புதுமை நிகழ்வதற்கு, மனிதர்களின் ஒத்துழைப்பையும் அன்னை மரியா ஊக்குவிக்கிறார் எனவும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

வரும் ஆண்டின் நோயாளர் உலக தின கொண்டாட்டங்கள், புனித பூமியின் நாசரேத் நகரில் இடம்பெற உள்ளன. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.