2015-09-15 16:08:00

அர்ஜென்டீனா, போர்த்துகல் வானொலியில் திருத்தந்தை பேட்டி


செப்.15,2015. தன் மக்களோடு எப்போதும் உடன் நடக்கும் இறைவனை விலக்கிவைத்துவிட்டு, மதக் கோட்பாடுகளை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கும் மத அடிப்படைவாதிகளே, தாக்குதல்களிலும், கொலைகளிலும், அழிவு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அர்ஜென்டீனா நாட்டின் வானொலி ஒன்றிற்கு பெட்டியளித்தத் திருத்தந்தை, கடவுளை வெறும் கோட்பாடாக, கருத்தியலாக மாற்றி, அவர் பெயரால் கொலைகள் புரியும் மத அடிப்படைவாதிகள் குறித்து தன் கவலையை வெளியிட்டதுடன், அடிப்படைவாதம், ஒளிதரும் விடியல்களை நம்மிடமிருந்து திருடி, அதன் தவறான கொள்கைகள் என்ற இருளில் நம்மைத் தள்ளுகிறது என்று கூறினார்.

நட்பு என்பது புனிதமானது என்பது குறித்தும், இறைவனின் படைப்பை மனிதகுலம் பாதுக்காக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், இந்த வானொலி பேட்டியில் விரிவாகப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், போர்த்துகல் நாட்டின் வானொலி ஒன்றிலும் பேட்டியளித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய புலம்பெயர்ந்தோர் பிரச்சனை, சுற்றுச்சூழல் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு, அநீதியான சமூக, பொருளாதார அமைப்பே முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

சமூக பொருளாதார அமைப்பிலும், அரசியலிலும், மனிதனை மையமாக வைத்து செயலாற்றும்போது, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்று கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு நாடும் தன் மக்கள், பிறநாடுகளுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயத்தை உருவாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் தன் பேட்டியில் வலியுறுத்தினார். 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.