2015-09-14 17:09:00

வாரம் ஓர் அலசல் – வாழ்த்தும் வளவாழ்வும்


செப்.14,2015. அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் தான் வாழ்ந்து வந்த லொரேட்டோ அருள்சகோதரிகள் சபையைவிட்டு விலகி, கொல்கத்தாவில் சாலையில் இறந்துகொண்டிருக்கும் கைவிடப்பட்ட மக்களுக்குப் பணி செய்வதற்கு தீர்மானம் எடுத்த நாள்கள் அவை. தனது இந்த விருப்பத்தை உரிய தலைவர்களிடம் தெரிவிக்கிறார். ஆனால் அனுமதி கிடைப்பதற்கு நாள்கள் கடந்துகொண்டே இருந்தன. அச்சமயத்தில் கொல்கத்தாவில் லொரேட்டோ அருள்சகோதரிகள் சபை நடத்தும் பள்ளியில் அன்னை தெரேசா அவர்கள் ஆசிரியர் பணி செய்து கொண்டிருந்தார்கள். இறுதியில் கொல்கத்தா பேராயருக்கு வத்திக்கானிலிருந்து கடிதம் வந்தது. அதில் அன்னை தெரேசா அவர்கள் அச்சபையைவிட்டு விலகுவற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை அந்த லொரேட்டோ சபை இல்லத் தலைவி மற்ற அருள்சகோதரிகளுக்கு அறிவித்தார். அவர் அறிவித்தபோது அந்தக் கன்னியர் இல்ல அறிவிப்புப் பலகையில் இப்படி எழுதினார்

போற்றவும் வேண்டாம், தூற்றவும் வேண்டாம், பிரார்த்தனை செய்யுங்கள்

அந்த அறிவிப்பைக் கேட்டவுடன், ஒரு வயதான அருள்சகோதரி, அன்னை தெரேசா அவர்கள், தனது இலட்சியங்களைக் கனவாகத்தான் பார்க்க முடியுமே தவிர, அவற்றைச் செயலாக்கும் திறன் அவர்களிடம் இல்லை, எனக்கும் வயதாகி விட்டது, இந்தப் பள்ளி அருள்சகோதரி தெரேசா இல்லாமல் வெறிச்சோடி விடும் என்று சொன்னார். அதோடு தேம்பித் தேம்பி அழுதார். ஆனால் அந்த இல்லத் தலைவி சொன்னதுதான் அன்னை தெரேசா அவர்களுக்கும், மற்றவருக்கும் ஊக்கமூட்டுகின்ற கூற்றாக இருந்தது.

போற்றவும் வேண்டாம், தூற்றவும் வேண்டாம், பிரார்த்தனை செய்யுங்கள்

அன்பு நேயர்களே, நம் வாழ்க்கையில் மற்றவர்களைப் போற்றுவது, வாழ்த்துவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பெரியவர்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து சொல்கின்றனர். திரு.வெ.இறையன்பு IAS அவர்கள் ஒரு கதை சொல்கிறார்

மகிழ்ச்சியாக இருந்த நேரங்களைத் திரும்பிப் பார்க்கும்போது அவை மீண்டும் வாழ்வில்  புது வசந்தத்தைக் கொண்டு வருகின்றன. மகிழ்ச்சி என்பது நமக்கு மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் நம் வாழ்வு தடையின்றி தொடர்ந்து செல்லும். வாழ்வு வளம் பெறும். இதற்கு ஒரு சிறந்த வழியாக, வாழ்த்தும் கலையைச் சொல்கிறார்கள் மனிதவள ஆர்வலர்கள். எந்த ஒரு நல்ல நாளிலும், நாம் ஒருவரை, நீங்கள் நீண்ட ஆயுளும் பரிபூண நலனும், இறையருளும் பெற்று வாழுங்கள் என்றுதான் வாழ்த்துகிறோம். மன்னிப்பதால் முதலில் பலன் பெறுபவர் மன்னிப்பவராய் இருப்பதுபோன்று, வாழ்த்துவதால் முதலில் பலன் பெறுபவரும் வாழ்த்துபவர்தான். அது எப்படி என்பதை விளக்குகின்றார் சுசிலா மூர்த்தி அவர்கள்.

வாழ்த்துபவர் வாழ்த்துப் பெறுபவரிடையே தூய உறவை ஏற்படுத்துவதோடு, இறைவனின் பிரசன்னத்தையும் வழங்கி குறைகள் நீங்கிட வழி அமைக்கின்றது. நாம் யார் யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்றும் சுசிலா மூர்த்தி அவர்கள் சொல்கிறார்.

நாம் எந்த ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கினாலும் முதலில் வரவேற்று வாழ்த்துகிறோம்.  நாம் ஒவ்வொருவரும் தனிச் சிறப்பான பண்புகள், நலன்களோடு இந்த உலகுக்குள் வாழவும், பிறருக்குத் தொண்டு ஆற்றவும் இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார். நாம் பிறரை மனதார வாழ்க என வாழ்த்தி ஆசி வழங்கும் ஒவ்வொரு முறையும் அங்கே உறவு மலர்கிறது. நம்மிடையே நிலவும் கலகங்கள், போராட்டங்கள், குழப்பங்கள் நீங்கி அமைதியும், ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் நிலவுகின்றன.

எனவே நாம் ஒருவர் ஒருவரை மனதின் ஆழத்திலிருந்து வாழ்த்துவோம். அதில் தயக்கம் காட்டாதிருப்போம். சுவரில் எறியும் பந்து மீண்டும் நம்மை நோக்கியே வருகின்றது. எனவே நாம் எதைக் கொடுக்கிறோமோ அது நமக்கே திரும்பி வரும். வாழ்த்தைக் கொடுத்தால் வாழ்த்துக் கிடைக்கும், சாபத்தைக் கொடுத்தால் சாபமே திரும்பக் கிடைக்கும். ஆதலால் பிறரை வாழ்த்துவோம், வளவாழ்வு பெறுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.