2015-09-14 16:37:00

இயேசுவைப் பின்செல்வது, சுதந்திரம் நோக்கி அழைத்துச் செல்லும்


செப்.14,2015. இயேசுவைப் பின்செல்வது என்பது, சுயநலத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுதலை அளிக்கும் உண்மைச் சுதந்திரம் நோக்கி அழைத்துச் செல்லும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தன் சிலுவையைச் சுமந்துகொண்டு, தன்னைப் பின்தொடர்பவர்களே உண்மை விடுதலையைப் பெறுவர் என்று கூறும் ஞாயிறு நற்செய்தியை மையப்படுத்தி, நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, இறை அருளுக்கு எதிராகச் செயல்படும் தியோனிடமிருந்தும், இறைவிருப்பத்திலிருந்து நம்மை விலகச் செய்யும் சோதனைகளிலிருந்தும் காக்க வல்லது, இயேசுவைப் பின்தொடரும் பாதையே என்று எடுத்துரைத்தார்.

தன் சிலுவையைச் சுமந்தவண்ணம் இயேசுவைப் பின் செல்வதென்பது, சுகமானதோ, உலக வெற்றியைத் தருவதோ அல்ல, மாறாக, உண்மையான விடுதலையை நோக்கி அழைத்துச் செல்வது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகப் போக்குகளையும், சுயநல எண்ணங்களையும் தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருக்கும் மனிதர்கள், அவற்றை மறுத்து, தங்கள் வாழ்வையே இயேசுவுக்காக இழக்க முன்வரும் வேளையில்தான், புதுப்பிக்கப்பட்ட, உண்மையான ஒரு வாழ்வைப் பெறுவர் என்றும், தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இயேசுவுடன் ஒன்றித்து வாழ்வதற்கு, அவரது வார்த்தைகளுக்குச் செவிமடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.