2015-09-14 16:20:00

C 9 கர்தினால்கள் அவையின் கூட்டம் திங்களன்று துவங்கியது


செப்.14,2015. திருஅவை நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்குவதற்கென உலகின் பல பகுதிகளிலிருந்தும் திருத்தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள C9 எனப்படும் கர்தினால்கள் அவையின் பதினோராவது கூட்டம், திருப்பீடத்தில் இத்திங்களன்று திருத்தந்தையுடன் துவங்கியது.

திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் இடம்பெறும் இக்கூட்டத்தில் பங்குபெறும் 9 கர்தினால்களும், இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தையுடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

திருத்தந்தையால் உருவாக்கப்பட்டிருக்கும் கர்தினால்கள் ஆலோசனை அவையில், இந்தியாவின் மும்பை பேராயரும், ஆசிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் (Oswald Gracias) அவர்களும் ஒருவர்.

இதற்கிடையே, தன் டுவிட்டர் பக்கத்தில், "தாழ்ச்சியுள்ளோரை இயேசு அன்பு கூர்கிறார். நாம் தாழ்ச்சியுள்ளவர்களாக வாழும்போது, நாம் ஆற்றும் சிறு செயல்களையும், பெரியனவாக இறைவன் மாற்றுகிறார்" என்ற செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று செய்தியாக வெளியிட்டுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.