2015-09-12 16:07:00

மீன் அதிகம் சாப்பிட்டால் மனஅழுத்த நோயைத் தடுக்கலாம்


செப்.12,2015. அதிக அளவு மீன் சாப்பிடுவது மன அழுத்த நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும் என்று அண்மை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் பேரிடம் நடத்தப்பட்ட 26 வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் அதிக அளவு மீன் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்த நோய் தோன்றுவதற்கான வாய்ப்பு, 17 விழுக்காடு குறைவதாக தெரியவந்துள்ளது.

மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள், மீன்களில் அதிக அளவு இருப்பது, இதற்கான முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

2001 ஆம் ஆண்டுமுதல் இது தொடர்பாக செய்யப்பட்டிருக்கும் அனைத்து ஆய்வுகளையும், அவற்றின் தரவுகளையும், முடிவுகளையும் ஆய்வாளர்கள் ஒப்பீடு செய்துபார்த்தபின், அதிகமாக மீன் உண்பதற்கும், மனிதர்களின் மன அழுத்த நோய்க்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு இருப்பதையும், அது ஆண் மற்றும் பெண் என இரு தரப்பினருக்கும் பொருந்துவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

எதனால் இது நடக்கிறது என்பதற்கான தெளிவான முடிவுக்கு ஆய்வாளர்கள் வரமுடியவில்லை எனினும், மன ஆரோக்கியத்துக்கு மீன் நல்லது என்பதை தங்கள் ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன்களை சாப்பிட விரும்பாத மரக்கறி உணவாளர்கள், மீன்களில் இருக்கும் நல்லவிதமான கொழுப்பு அமிலத்தின் பலன்களை அடையவேண்டுமானால், ஏராளமான விதைகள் மற்றும் கொட்டைகளை சாப்பிடவேண்டும் என்றும் ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : BBC/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.