2015-09-12 15:40:00

பொதுக்காலம் 24ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


கிராமத்திலிருந்து நகரம் வந்துசேரும் ஓர் அப்பாவியின் அனுபவம், நமது சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கிறது. நகரத்தில், எந்நேரமும், மக்கள், கூட்டம் கூட்டமாய் இருப்பதைப் பார்த்து மிரண்டு விடுகிறார் கிராமத்து அப்பாவி. பார்க்கும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். இந்த வெள்ளத்தில் தானும் அடித்துச் செல்லப்படுவோமோ என்ற ஒரு பயம் அவருக்கு.

இரவில் படுத்துறங்க இடம் தேடுகிறார். ஒரு மண்டபம் கண்ணில் படுகிறது. அந்த மண்டபத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் படுத்திருக்கின்றனர். கூட்டமாய் படுத்திருந்த அம்மனிதர்களைப் பார்க்கையில், ஏதோ வரிசையாக மூட்டைகள் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போல் ஓர் உணர்வு நம் நாயகனுக்கு. இந்த மூட்டைகளில் ஒரு மூட்டையாக தான் இரவில் காணாமல் போய்விடுவோமோ என்று பயந்தார்.

காலையில் எழுந்ததும் தன்னை அடையாளம் கண்டு கொள்வதற்காக, தன் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு படுத்தார். இந்த அப்பாவி கிராமத்து மனிதர் செய்ததைக் கவனித்துக் கொண்டிருந்தார், நகரத்து மனிதர் ஒருவர். அவர் கொஞ்சம் குறும்புக்காரர். எனவே, அந்த கிராமத்து மனிதர் நன்கு உறங்கிய பின், அவர் காலில் கட்டியிருந்த அந்த வெள்ளைத் துணையை கழற்றி, தன் காலில் கட்டிக்கொண்டு படுத்து விட்டார்.

விடிந்தது. கிராமத்து மனிதர் எழுந்தார். அவர் காலில் கட்டியிருந்த வெள்ளைத் துணியைக் காணாமல் திகைத்தார். கொஞ்ச தூரம் தள்ளி, மற்றோருவர் காலில் அது கட்டியிருப்பதைக் கண்டார். அவரது திகைப்பு, குழப்பம், பயம் எல்லாம் அதிகமானது. நகரத்திற்கு வந்து ஒரு நாளிலேயே, ஓர் இரவிலேயே தான் காணாமற் போய்விட்டோமே என்று அவர் மிகவும் வருந்தினார். இயேசு சபையைச் சேர்ந்த Carlos Vallés என்ற ஆன்மீக எழுத்தாளர், தன் நூல் ஒன்றில் பகிர்ந்துகொண்ட கதை இது.

இந்தக் கதை, நம் வாழ்வுக்கு ஓர் உவமையாகப் பயன்படுகிறது. 'நான்' என்பதை நமக்குக் காட்ட, நமது குலம், படிப்பு, பதவி, சம்பளம் என்ற வெளிப்புற அடையாளங்களை அதிகம் நம்புகிறோமா? அவை காணாமற் போகும்போது, நாமே காணாமற் போனதைப் போல் உணர்கிறோமா? எளிதில் காணாமற்போகக் கூடிய இந்த அடையாளங்களே 'நான் யார்' என்பதைத் தீர்மானிக்க விட்டுவிட்டால், நாம் உண்மையிலேயே யார் என்பதை அறியாமல், தொலைந்துபோக நேரிடும்.

வெளி அடையாளங்களைக் கட்டி வேதனைப்பட்டு, அவை தொலைந்துபோனால், நாமும் தொலைந்துபோனதைப் போல் உணர்வது, தவறு என்பதையும், இந்த அடையாளங்கள் ஏதுமில்லாமல், அடிப்படையில், உண்மையில் ‘நான் யார்’ என்பதை அறிந்துகொள்வதே, அனைத்து அறிவிலும் சிறந்தது என்பதையும், சாக்ரடீஸ் உட்பட, பல மேதைகள் சொல்லிச் சென்றுள்ளனர். 'நான் யார்' என்ற இந்தக் கேள்வி இயேசுவுக்கும் எழுந்தது. இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுகிறது. இந்த நற்செய்தியின் இரு வாக்கியங்கள், இயேசுவின் இரு கேள்விகள் நம் சிந்தனைகளை இன்று நிறைக்கட்டும்.

"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?"

"நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?"

நான் ஆசிரியர் பணி புரிந்தபோது, அரசு அதிகாரிகள் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அவ்வப்போது சொன்ன ஒரு சில தகவல்கள், இப்போது என் மனதில் நிழலாடுகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று காலை செய்தித் தாள்களில் வந்த தகவல்களையும், முந்திய நாள் இரவு தொலைக்காட்சி வழியே வந்த தகவல்களையும், சேகரித்து, வகைப்படுத்தி, பட்டியலிட்டு, நாட்டின் பிரதமர் அல்லது மாநிலத்தின் முதலமைச்சர் இவர்களிடம் கொடுப்பதற்கென ஓர் அரசு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..

இத்தகவல்களைத் திரட்டுவதன் வழியாக, நாட்டு நடப்புபற்றி தெரிந்துகொள்வது என்பது ஒரு புறமிருக்க, நாட்டில் தங்களைப்பற்றி, தங்கள் ஆட்சிபற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதே, இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு நாள் காலையிலும் இத்தலைவர்களின் நினைவை, மனதை ஆக்ரமிக்கும் அந்தக் கேள்வி: "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?"

இவர்கள் மனதை இந்தக் கேள்வி ஆக்கிரமிக்கின்றது, உறுத்துகின்றது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், இத்தலைவர்கள், உள்ளொன்றும், வெளியோன்றும் என இரட்டை வேடமிட்டு வாழ்வதால், எது தங்கள் உண்மை நிலை என்பதே மாறி, மக்கள் முன் தங்கள் வேடம் எவ்வளவு தூரம் நிலைத்துள்ளது என்ற சந்தேகமும், பயமும் இவர்களை ஆட்டிப் படைக்கிறது. மக்களை மையப்படுத்தி, அவர்கள் நலனையே நாள் முழுவதும் சிந்தித்து, செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ, இந்தக் கேள்வியே எழாது. அப்படியே எழுந்தாலும், அது பயத்தை உண்டாக்காது.

இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு ஒரு முக்கிய காரணம்?... தன்னை இன்னும் சரிவர புரிந்து கொள்ளாத சீடர்களுக்கு அவர் ஒரு வாழ்வுப் பாடத்தைக் கற்றுக்கொடுக்க விழைந்தார் என்பதே. மக்கள் தன்னைப்பற்றி சொல்வதைக் கேட்டாகிலும், சீடர்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக, தன்னைப் புரிந்துகொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் இயேசுவுக்கு இருந்திருக்கலாம். அல்லது, இந்தக் கேள்வி பதில் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, தன் பாடுகளைப்பற்றி சொல்லப்போவதை சீடர்கள் புரிந்துகொள்ள, மக்களிடமிருந்து அவர்கள் கேட்ட ஒரு சில விசுவாச அறிக்கைகள், அவர்களுக்கு உதவாதா என்ற ஏக்கமாக இருக்கலாம்.

மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

இருபது நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் அதிகமான, ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம், அல்லது, முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. மனித வரலாற்றில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தனை ஆழமானப் பாதிப்புக்களை உருவாக்கியவர்கள் ஒரு சிலரே. இவர்களில் ஒருவர் இயேசு என்பது, மறுக்கமுடியாத உண்மை.

இன்றைய நற்செய்தியில் இயேசு கேட்கும் இரண்டாவது கேள்வி: "நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?"

ஹலோ, உங்களைத்தான்... என்னையும்தான்... இந்தக் கேள்வி நமக்குத்தான்... நாம் சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், அருள்பணியாளர்கள், சகோதரிகள், ஆசிரியர்களிடம் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற அந்த முதல் கேள்விக்குப் பதில் சொல்லிவிடலாம். ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.

நான் கேட்டவையும், படித்தவையும் இந்தக் கேள்விக்கு பதிலாக முடியாது. நான் பட்டுணர்ந்தவை, மனதார நம்புகிறவை... இவையே இந்தக் கேள்விக்கான பதிலைத் தர முடியும்.

இயேசுவின் இந்தக் கேள்வி, வெறும் கேள்வி அல்ல. இது ஓர் அழைப்பு. அவரது பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க, அவர் தரும் அழைப்பு. கேள்வி பதில் என்ற வாய்மொழி வித்தைகளைத் தாண்டி, செயலில் இறங்க இயேசு இந்த அழைப்பை விடுக்கிறார். "இயேசுவை இறைவன் என்று, தலைவர் என்று, மீட்பர் என்று நம்புகிறேன்" என்று சொல்வது எளிது. ஆனால், அந்த நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவது எளிதல்ல. செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீண் என்று, இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்:

யாக்கோபு 2 14-17

என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா?

ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, "நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;" என்பாரென்றால் அதனால் பயன் என்ன?

அதைப்போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்ற முதல் கேள்விக்கு நாம் அளிக்கும் விடைகள், நம் அறிவை வளர்க்கும். நமது விவாதங்களுக்கு உதவும். பல நூறு பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாக மாறும். மனித வரலாற்றில், இயேசு யார் என்பதை விளக்க எழுந்த காரசாரமான விவாதங்கள், பலரது வாழ்வைப் பறித்ததே தவிர, அவர்கள் வாழ்வை மாற்றியதா என்பது கேள்விக்குறிதான்.

கடவுளைப் பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளை, கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை, இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேட்ட கதை. நீங்களும் இதைக் கேட்டிருக்கலாம்.

குடி பழக்கத்தில் இருந்து முற்றிலும் திருந்திய ஒருவரை, பங்குத் தந்தை சந்திக்கிறார். அவரது மனமாற்றத்திற்கு, பங்குத் தந்தை காரணம் கேட்கும்போது, தான் இயேசுவைச் சந்தித்தாக சொல்கிறார், மனமாற்றம் பெற்றவர்.

அவர் உண்மையிலேயே இயேசுவைத்தான் சந்தித்தாரா என்று அறிய விழைந்த பங்குத் தந்தை, அவரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். இயேசு எங்கே பிறந்தார்? எத்தனை வருடம் வாழ்ந்தார்? எத்தனை புதுமைகள் செய்தார்? எங்கே இறந்தார்? என்று பங்குத் தந்தை அடுக்கிக்கொண்டே சென்ற கேள்விகள் எதற்கும், மனம் மாறியவரால் பதில் சொல்ல முடியவில்லை. பங்குத் தந்தைக்கு ஒரே கோபம்... இந்தச் சாதாரணக் கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர், எப்படி இயேசுவைச் சந்தித்திருக்க முடியும் என்று சந்தேகப்படுகிறார்.

அதற்கு, மனம் மாறிய அவர் சொல்லுவார்: "சாமி, நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். ஆறு மாதங்களுக்கு முன்பு வரை என் வாழ்வு நரகமாக இருந்தது. நான் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, என் மனைவி, குழந்தைகளைக் கொடுமைப் படுத்தினேன். மாலையில் நான் வீடு திரும்பும் நேரத்தில் என் கண்களில் படக்கூடாது என்று, என் குழந்தைகள் தெரு முனையில் சென்று ஒளிந்து கொள்வார்கள். ஆறு மாதங்களுக்கு முன், நான் பங்கேற்ற ஒரு செப வழிபாட்டின்போது, இயேசுவைச் சந்தித்தேன். அன்றிலிருந்து என் வாழ்வு மாறியது. நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நான் மாலையில் வீடு திரும்பும்போது, என் குழந்தைகள், தெரு முனையில் எனக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மாற்றத்தைத் தந்தது, இயேசு. அது மட்டும்தான் எனக்குத் தெரியும்" என்று அவர் சொன்னதும், பங்குத் தந்தை மௌனமானார்.

இயேசு கேட்கும் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பது, கேள்வி அல்ல, ஓர் அழைப்பு. அவரை அனுபவப்பூர்வமாகச் சந்திக்க, அவரை நம்பி, அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க, வாழ்வுப்பாதையை மாற்றியமைக்க, அவர் தரும் ஓர் அழைப்பு.

இந்த அழைப்பிற்கு நாம் தரும் பதில்கள், வார்த்தைகளாக அல்லாமல், செயல் வடிவம் பெறட்டும். குறிப்பாக, வாழ்வில் அனைத்தையும் பறிகொடுத்ததால், நம்பிக்கை இழந்திருப்போருக்கு நம்பிக்கை தரும் வகையில், நம் செயல்கள் அமையட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.