2015-09-12 15:58:00

'தற்கொலைக்கு உதவும் சட்டம்' - கர்தினால் நிக்கோல்ஸ் கண்டனம்


செப்.12,2015. மனித உயிர் குப்பையென தூக்கியெறியப்படக் கூடியது என்று பிரித்தானிய பாராளுமன்றம் உலகிற்குச் சொல்ல நினைக்கிறது என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் தலைவர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

'தற்கொலைக்கு உதவி செய்யும் சட்டம்' பிரித்தானிய பாராளுமன்றத்தில் இவ்வெள்ளியன்று விவாதிக்கப்பட்டச் சூழலில், இது குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிக்கு எதிராக அனைத்து மதத் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனர் என்பதை தன் பேட்டியில் சுட்டிக்காட்டிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பது மதம் சார்ந்த கருத்து மட்டும் அல்ல, மாறாக, அது மனிதம் சார்ந்த கருத்து என்று தெளிவுபடுத்தினார்.

மரணமடைய விரும்பும் யாருக்கும் உதவிகள் செய்வது, இதுவரை, பிரித்தானியாவில் ஒரு குற்றம் என்பதும், அதற்கு, 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை உண்டு என்பதும், குறிப்பிடத்தக்கன.

இதற்கிடையே, 'தற்கொலைக்கு உதவி செய்யும் சட்டம்' பிரித்தானிய பாராளுமன்றத்தில் இவ்வெள்ளியன்று விவாதத்திற்கு வந்தவேளையில், 330 பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராகவும், 118 பேர் அதை ஆதரித்தும் வாக்களித்ததால், இதைச் சட்டமாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டதென்று, ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / ICN








All the contents on this site are copyrighted ©.