2015-09-12 15:07:00

கூட்டுறவு வங்கிகளின் பணி இன்றியமையாதது - திருத்தந்தை


செப்.12,2015. கிறிஸ்தவ ஒருமைப்பாட்டுணர்வுடன் வழிநடத்தப்படும் கூட்டுறவு வங்கிகளின் பணி, சமுதாய முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என்று எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோமை கூட்டுறவு வங்கியின் பணியாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் இச்சனிக்கிழமை காலை, திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூட்டுறவு வங்கிகள் மனித சமுதாயத்திற்கு ஆற்றிவரும் பணிகள் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

வேளாண்மைத் துறையிலும், இளையோருக்கான வேலைவாய்ப்பிலும், நலத் துறையிலும் பொருளாதார நேர்மையிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், கூட்டுறவு வங்கிகள் வழங்கிவரும் உதவிகளை தனிப்பட்ட வகையில் குறிப்பிட்டு பாராட்டினார் திருத்தந்தை.

ஒருவர் மற்றவரோடு ஒத்துழைத்து அனைவருக்கும் உதவும் இத்தகைய வங்கிகள், பொருளாதாரத்தை மனிதாபிமானமுடையதாக மாற்றுவதுடன், திறமையையும், ஒருமைப்பாட்டையும் ஒன்றிணைத்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

கூட்டுறவு வங்கிகளின் பணியில், ஒன்றிப்பு, பிறரன்பு, புரிந்துகொள்ளும் பண்பு, பணிக்கு விசுவாசம் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும் திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.