2015-09-12 15:52:00

கியூபாவில் திருத்தந்தை பயணத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை


செப்.12,2015. இம்மாதம் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கியூபா நாட்டில் திருப்பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, 3500க்கும் அதிகமான கைதிகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை வழங்கவிருப்பதாக, கியூபா அரசு அறிவித்துள்ளது.

கியூபா நாட்டில் 1959ம் ஆண்டு இடம்பெற்ற புரட்சிக்குப் பின், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சிறைக் கதிகள் விடுவிக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத் தக்கது.

கியூபா நாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகை தருவதை சிறப்பிக்கும் வகையில் 3,522 கைதிகள் விடுதலை பெறவுள்ளனர்.

வயது முதிர்ந்தோர், நோயுற்றோர், பெண்கள், 20 வயதிற்கு உட்பட்ட சிறார் என்ற அடிப்படையில் இவர்கள் விடுவிக்கப்பட விருப்பதாகவும், தேசப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தோர் இந்தச் சலுகையைப் பெறமாட்டார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, திருத்தந்தையர் இரண்டாம் ஜான் பால் மற்றும், 16ம் பெனடிக்ட் ஆகியோர் கியூபா நாட்டிற்கு மேற்கொண்ட திருப்பயணங்களுக்கு முன்னரும், கைதிகள் இதேபோல் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : CWN/BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.