2015-09-11 16:32:00

நவம்பர் 25 முதல் 30 முடிய ஆப்ரிக்கத் திருத்தூதுப் பயணம்


செப்.11,2015. கென்யா, உகாண்டா, மற்றும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆகிய ஆப்ரிக்க நாடுகளின் அரசுத் தலைவர்களும், ஆயர்களும் விடுத்துள்ள அழைப்பினை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் மாதம் 25ம் தேதி முதல் 30ம் தேதி முடிய இம்மூன்று நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, திருப்பீடம் இவ்வியாழனன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 25 முதல் 27 வரை கென்யாவிலும், 27 முதல் 29 வரை உகாண்டாவிலும், 29, 30 ஆகிய தேதிகளில் மத்திய ஆப்ரிக்கக் குடியரசிலும் திருத்தந்தையின் பயணம் அமையும் என்றும், இப்பயணத்தின் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

இம்மாதம் கியூபா, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்வது, அவரது 10வது பயணமாகவும், ஆப்ரிக்க நாடுகளுக்கு அவர் செல்வது 11வது திருத்தூதுப் பயணமாகவும் அமையும்.

இந்த 11 திருத்தூதுப் பயணங்களில் அவர், 19 நாடுகளில் தன் காலடித் தடங்களைப் பதித்துவிடுவார் என்பதும், இவற்றில், ஆசிய நாடுகளான, தென் கொரியா, இலங்கை, பிலிப்பின்ஸ் ஆகியவை அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.