2015-09-11 16:43:00

திருத்தந்தையின் உரை குறித்து ஐ.நா. அவைப் பொதுச் செயலர்


செப்.11,2015. பணிவுள்ளமும், மனிதமும் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறும் வார்த்தைகள், உலகிற்கு நன்னெறியைக் காட்டுகின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.

இம்மாதம் 25ம் தேதி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் பொது அமர்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கவிருக்கும் உரைகுறித்து, இவ்வியாழன் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் பான் கி மூன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

கருணையுடன் மனித குலத்தை வழிநடத்திவரும் ஓர் ஆன்மீகத் தலைவர், உலகின் 150க்கும் மேற்பட்ட நாடுகளில், முடிவெடுக்கும் சக்தி பெற்ற தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்போகும் இந்த உரை, வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும் என்று ஐ.நா. பொதுச் செயலர் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள திருமடலைக் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், இத்திருமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் தனக்கு ஏற்புடையன என்றும், ஐ.நா. மேற்கொள்ளும் முயற்சிகளில் திருப்பீடம் ஆர்வம் கொண்டிருப்பது, ஊக்கம் அளிப்பதாக உள்ளதென்றும் பான் கி மூன் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஐ.நா.அவை பொது அமர்வில், திருத்தந்தை, ஸ்பானிய மொழியில் உரையாற்றுவார் என்றும், தீவிரவாதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வறுமை, புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகள் என்ற பல கருத்துக்கள் திருத்தந்தையின் உரையில் இடம்பெறும் என்று, ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Bernardito Auza அவர்கள், அமெரிக்க செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.