2015-09-11 15:42:00

தன்னையும் சேர்த்து, அனைவரும் வெளிவேடக்காரராகும் ஆபத்து


செப்.11,2015. திருத்தந்தையாகிய தன்னையும் சேர்த்து, அனைவருமே வெளிவேடக் காரர்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை வழங்கிய மறையுரையில் குறிப்பிட்டார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், புனித பவுல் அடியார், திமொத்தேயுவுக்கு எழுதியத் திருமடலில் தன் குறைகளை அறிக்கையிடும் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு மறையுரை வழங்கினார் திருத்தந்தை.

நமது குறைகளையும், குற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் துணிவு இருந்தால், அடுத்தவரை இரக்கத்துடன் காணும் பக்குவமும் பெறுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

தன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை அகற்றாமல், சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை அகற்ற எண்ணுவோரின் வெளிவேடத்தை இயேசு நற்செய்தியில் சாடியிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய வெளிவேடம், திருத்தந்தை துவங்கி, அனைவரிலும் இருக்கக்கூடும் என்று எடுத்துரைத்தார்.

பிறரைக் குறை சொல்லாமல், பழித்துரைக்காமல் வாழும் எவரையும், உடனடியாகப் புனிதர்களாக உயர்த்தலாம் என்றும், மன்னிக்கும் பரந்த மனதைப் பெற அனைவரும் செபிக்கவேண்டும் என்றும் கூறி, திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.