2015-09-11 16:06:00

கிளரீசியன் சபை உலகஅவை உறுப்பினர்களுடன் திருத்தந்தை


செப்.11,2015. தனி மனிதர்களிடமும், துறவுக் குழுமங்களிலும் மகிழ்வு இல்லாதபோது, மகிழ்வின் சாட்சிகளாக அவர்கள் வாழமுடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிளரீசியன் மறை பணியாளர்களின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

உலகளாவிய கிளரீசியன் மறை பணியாளர்களின் உயர் மட்ட உலக அவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உரோம் நகர் வருகை தந்திருக்கும் 120க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை, இவ்வெள்ளி காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இத்துறவுச் சபையின் அகில உலகத் தலைவராகத் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும், மேத்யு வட்டமட்டம் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி கூறி, தன் உரையைத் துவக்கினார்.

இத்துறவுச் சபையின் உலக அவை, "நற்செய்தி மகிழ்வின் சாட்சிகளும், தூதர்களும்" என்ற மையக் கருத்துடன் கூடியுள்ளத்தைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உள்ள இம்மகிழ்வு, தூய்மைப்படுத்தப்பட்டு, பகிரப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்து நம் வாழ்வின் மையமாகும்போது, இந்த மகிழ்வுக்கு நாம் சாட்சிகளாகவும், தூதர்களாகவும் மாறமுடியும் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

மறைபரப்பு நோக்கத்தைக் கொண்டுள்ள கிளரீசியன் துறவுச் சபை, உலகிலிருந்து எழும் பல்வேறு குரல்களைக் கேட்டு, பகுத்தறியும் திறன் கொண்டதாக விளங்கவேண்டும் என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

புனித அன்டனி மரிய கிளாரெட், தன் ஆயர் இலச்சனையில் பொறித்திருந்த ‘கிறிஸ்துவின் பேரன்பு நம்மை ஆட்கொள்கிறது’ என்ற வார்த்தைகள், நம்மையும் ஆட்கொண்டு, வழிநடத்தவேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.