2015-09-11 15:31:00

கடுகு சிறுத்தாலும்: பிஞ்சு மனசுல கஷ்டங்களைத் திணிக்கவேண்டாம்


‘அப்பா, என் கிளாஸ்மேட் மாதுவோட அப்பா கார் வாங்கியிருக்கார். புது கார்ல கோயிலுக்கு போனாங்களாம். ரொம்ப ஜாலியா இருந்துச்சுன்னு மாது சொன்னான். நீயும் ஒரு கார் வாங்குப்பா’ என்றான் மகன் ரவி.

‘வாங்கிட்டாப் போச்சு. சீக்கிரமே வாங்கிடலாம்’ என மகனை இழுத்து அணைத்து சொன்னார், தந்தை மோகன். ‘கார் வாங்க நிறைய பணம் வேணும். இன்னும் அஞ்சு வருடத்தில் சம்பாதிச்சுடுவேன். நீ ஹைஸ்கூல் போகும்போது உன்னை காரில் கொண்டு வந்து விடுவேன். சமத்து புள்ளையா விளையாடிட்டு வாப்பா’ என தந்தை சொன்னதும், துள்ளிக்குதித்து ஓடினான் ரவி. ‘நம்ம ரெண்டு பேருமே கூலி வேலைச் செய்கிறோம். அஞ்சு வருடத்தில் கார் வாங்கிடுவேன்னு குழந்தைகிட்டே எதுக்கு பொய் சொன்னீங்க?’ என மோகனின் மனைவி கேட்டாள். ‘இப்போ அவனுக்கு அஞ்சு வயசு ஆகுது, அஞ்சு வருடம் போனா நம்ம பொருளாதார நிலைமை புரிய ஆரம்பிச்சுடும். அந்த பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களைத் திணிக்கவேண்டாம்’ என அமைதியாகப் பதிலளித்தார் மோகன். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.