2015-09-11 16:40:00

அன்னியரைப் பாதுகாப்பது கிறிஸ்தவர்களின் அடிப்படை விழுமியம்


செப்.11,2015. புகலிடம் தேடி, ஐரோப்பியக் கண்டத்தில் நுழைந்திருக்கும் மக்களுக்கு உதவுவது, அனைத்து ஐரோப்பிய நாடுகளின் கடமை என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஆயர் பேரவைகளின் உயர் மட்ட நிரந்தரக் குழு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 9, இப்புதனன்று மியூனிக் நகரில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, கர்தினால் Reinhard Marx அவர்களும், ஏனைய ஆயர்களும் இணைந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில், புலம்பெயர்ந்தோர் பிரச்சனையிலிருந்து ஒரு சில ஐரோப்பிய நாடுகள் விலகிக்கொள்வது சரியான முடிவல்ல என்று கூறப்பட்டுள்ளது.

அன்னியரை வரவேற்று, பாதுகாப்பது கிறிஸ்தவர்களின் அடிப்படை விழுமியம் என்று கூறியுள்ள இவ்வறிக்கை, இந்தப் பிரச்சனைக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான தீர்வுகளும், முயற்சிகளும் தேவை என்று கூறியது.

ஐரோப்பாவில் நுழைய முயலும் மக்களை, கடலில் தத்தளிக்க விடுவதும், எல்லை நாடுகள் அவர்களைத் தடுத்து நிறுத்துவதும் மனிதாபிமானத்திற்கு பெரும் இழுக்கான செயல்கள் என்றும், ஆயர்களின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.