2015-09-10 16:37:00

மகிழ்வு, இறைவனின் மிக அரியக்கொடை - திருத்தந்தையின் செய்தி


செப்.10,2015. மகிழ்வு என்பது, இறைவனின் மிக அரியக்கொடை என்றும், ஒவ்வொருவரும் மகிழ்வாய் இருப்பதும், அந்த மகிழ்வை, சந்திக்கும் அனைவரோடும் பகிர்வதுமே இறைவனின் விருப்பம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோருக்கு வழங்கிய ஒரு செய்தியில் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், பாப்பிறை மறைபரப்புப்பணி கழகத்தைச் சேர்ந்த அருள்பணி ஆன்ட்ரு ஸ்மால் (Andrew Small) அவர்கள், "Joke with the Pope" அதாவது, 'திருத்தந்தையுடன் சிரிப்புத் துணுக்குகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்' என்ற கணணிவழி பயன்பாட்டைத் துவக்கியுள்ளதை ஊக்கப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று அவருக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகில் எத்தனையோ பேர், குறிப்பாக, குழந்தைகள் தங்கள் மகிழ்வைப் பறிகொடுத்து வாழும் இச்சூழலில், இளையோராகிய நீங்கள் மகிழ்வின் தூதர்களாக மாறவேண்டும் என்று திருத்தந்தை இளையோருக்கு வழங்கிய தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் மகிழ்வாய் இருப்பதற்காக கடவுள் ஏங்கிக் காத்திருக்கிறார், எனவே, உங்கள் மகிழ்வை, சிரிப்பைப் பகிர்ந்துகொள்ள உங்களை அழைக்கிறேன் என்று கூறியத் திருத்தந்தை, உங்கள் நகைச்சுவை துணுக்குகளை உலகினரோடு பகிர்ந்துகொள்ளுங்கள், அவ்வாறு நீங்கள் செய்தால், திருத்தந்தை மிகவும் மகிழ்வார், அனைத்திற்கும் மேலாக கடவுள் மிக, மிக மகிழ்வடைவார் என்று திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.