2015-09-10 16:00:00

தூய ஆவியானவரின் சக்தி, ஆயர்கள் வாழ்வை மாற்றியமைக்கட்டும்


செப்.10,2015. ஆயர்களாக நீங்கள் திருநிலைப்படுத்தப்பட்ட வேளையில், ஒரு மென்மையான தென்றலாக உங்கள் வாழ்வில் நுழைந்த தூய ஆவியானவரின் சக்தி, உங்களுள் உறங்கிவிடாமல், தொடர்ந்து உங்கள் வாழ்வை மாற்றியமைக்கட்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய ஆயர்களிடம் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையில், இவ்வாண்டு, திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட 130 புதிய ஆயர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாடுகளின் வேளையில் சிதறி ஓடிய சீடர்கள், இயேசுவின் உயிர்ப்பினால் புதியதொரு திடனைப் பெற்றதை தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

ஆயராக நியமனம் பெற்றதும், புதிய ஆயர்களுக்குள் உருவான கலக்கம், தயக்கம் அனைத்தும், திருப்பொழிவு பெற்றபோது, அவர்கள் சந்தித்த, உயிர்த்த இயேசுவின் உறுதி மொழிகளால் விலகியிருக்கும் என்று தான் நம்புவதாக, திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆயர்கள்: உயிர்ப்பின் சாட்சிகள்; ஆயர்கள்: மறைகல்வி புகட்டுபவர்கள், ஆன்மீக வழிகாட்டிகள்;  ஆயர்கள்: ஆழ்நிலை தியான யோகிகள்; மற்றும் ஆயர்கள்: மறைபரப்புப் பணியாளர்கள் என்ற நான்கு பிரிவுகளில், திருத்தந்தை புதிய ஆயர்களுக்கு உரை வழங்கினார்.

இவ்வுலகம் மட்டுமே உண்மை என்ற பாணியில் இயங்கிவரும் உலகப்போக்கு, மக்கள் மனங்களில் அயர்வையும், நம்பிக்கையின்மையையும் உருவாக்கும்போது, மறு உலகை உறுதி செய்யும் உயிர்ப்பின் சாட்சிகளாக ஆயர்கள் வாழ்வது, எளிதான பணியல்ல என்பதை, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இவ்வுலகம் உருவாக்கியுள்ள தொழில்நுட்பம், தூரத்தில் இருப்பவரோடு தொடர்புகொண்டு, உலகமயமாக்கல் என்ற போக்கை உறுதிசெய்யும் அதே வேளையில், அடுத்திருப்பவரிடமிருந்து நம்மையே தூரப்படுத்தி, மனித சமுதாயத்தை துண்டுகளாக்கி வருகிறது என்று கூறியத் திருத்தந்தை, இந்த முரண்பாட்டைக் களைவது, ஆயரின் முக்கியப் பணி என்று எடுத்துரைத்தார்.

இயற்கை என்ற தோட்டத்திற்கு எழுந்துள்ள ஆபத்து, முன்பு இல்லாத அளவு வளர்ந்திருக்கும் புலம்பெயர்வு, இளையோரும், முதியோரும் ஒதுக்கப்படுவதால் விளையும் நம்பிக்கையின்மை, என்ற பல பிரச்சனைகளை எடுத்துரைத்தத் திருத்தந்தை, இந்த பட்டியலில் இன்னும் பல பிரச்சனைகளை ஆயர்கள் இணைக்கமுடியும் என்றும் கூறினார்.

பிரச்சனைகளைப் பட்டியலிடுவதால் ஆயர்களை அச்சுறுத்துவது தன் நோக்கமல்ல என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, இப்பிரச்சனைகளின் மத்தியில், நற்செய்தியின் மகிழ்வை எடுத்துரைப்பதும், அந்த மகிழ்வில் மக்களை நடத்திச் செல்வதும் ஆயரின் கடமை என்று வலியுறுத்திக் கூறினார்.

மகிழ்வற்ற கிறிஸ்தவம், மனச்சோர்வை உருவாக்கும் என்பதால், உங்கள் பொறுப்பில் இருக்கும் அருள் பணியாளர்கள் மகிழ்வு என்ற மந்திர சக்தியுடன் மக்கள் பணியில் ஈடுபட உதவுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய ஆயர்களுக்கு அறிவுறுத்தினார்.

"இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" என்ற ஒரு செய்தியை, வரவிருக்கும் இரக்கத்தின் யூபிலி ஆண்டில் நீங்கள் செல்லுமிடமெங்கும் எடுத்துச் சென்று, இறைவனின் இரக்கத்தைக் கொண்டாடுங்கள் என்று தன் உரையின் இறுதியில் திருத்தந்தை, ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.