2015-09-10 16:14:00

திருஅவையின் அடிப்படை உயிரணுக்கள், குடும்பங்களே - திருத்தந்தை


செப்.10,2015. ஆயர்களின் மாமன்றம் துவங்குவதற்கு ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், கிறிஸ்தவத் தம்பதியர் அனைத்துலக இயக்கத்தின் பிரதிநிதிகளை உரோம் நகரில் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நமது அன்னையின் அணிகள் என்று பொருள்படும் Equipes Notre-Dame என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு அகில உலகக் கருத்தரங்கில் கலந்துகொள்ள உரோம் நகர் வந்திருக்கும் 400 பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் அடிப்படை உயிரணுக்கள் குடும்பங்களே என்று கூறி, தன் வாழ்த்துரையைத் துவங்கினார்.

கிறிஸ்துவைப் பறைசாற்ற, திருமணத் தம்பதியரும், குடும்பங்களுமே மிகச் சிறந்த இடங்கள் என்று கூறியத் திருத்தந்தை, இங்கு வார்த்தைகளை விட, வாழ்வால் பறைசாற்றுதல் நடைபெற வேண்டும் என்பது தன் விருப்பம் என்றும் எடுத்துரைத்தார்.

அவசரமாக ஓடிக்கொண்டே இருக்கும் இவ்வுலகில், 'அமர்ந்து உரையாடுவது' என்ற பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, தரம் வாய்ந்த இத்தருணங்களில், நன்றி சொல்லுதல், மன்னிப்பு கேட்டல் ஒருவரை ஒருவர் உண்மையாகப் பாராட்டுதல் என்ற உயர்ந்த செயல்பாடுகள் இடம்பெற வாய்ப்புண்டு என்று கூறினார்.

குடும்பமாகக் கூடி செபிப்பது என்ற பழக்கம் பல குடும்பங்களில் காணாமல் போய்விட்டது என்பதையும் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, குடும்பச் செபம் என்ற இந்தப் பாரம்பரியத்தை மீண்டும் புதுப்பிப்பது, இன்றையத் தேவை என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

வேலையின்மை, வறுமை, நோய் போன்ற பல இடர்களால் குடும்பங்கள் காயப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, காயப்பட்டிருக்கும் குடும்பங்களைத் தொட்டு குணமாக்குவது, Equipes Notre-Dame இயக்கத்தின் அழைப்பு என்று எடுத்துரைத்தார்.

இவ்வியக்கத்தை நிறுவிய அருள்பணி Henri Caffarel அவர்களை, அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் உரோம் நகரை அடைந்துள்ளன என்பதை தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியா, புனித யோசேப்பு ஆகியோரின் பரிந்துரையோடு இறைவனின் ஆசீர், இவ்வியக்கத்தில் இணைந்திருக்கும் குடும்பங்களை நிறைக்கவேண்டும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.