2015-09-10 16:31:00

கடுகு சிறுத்தாலும் – கனவுப் பேட்டியில் கடவுள் என்ன சொன்னார்?


ஒரு நாள் பக்தர் ஒருவர், கடவுளை அழைத்து உங்களுக்கு நேரமிருந்தால் எனக்கு ஒரு பேட்டி கொடுங்கள் என்று கேட்டார். நேரமா என்று சிரித்துக்கொண்டே, என்ன கேட்கப் போகிறாய்? கேள் என்றார் கடவுள். “மனிதர்களில் உங்களை வியப்படைய வைப்பது எது?” என்று கேட்டார் அவர். அதற்கு கடவுள், “மனிதர் அதிக நாள் குழந்தையாக இருக்கப் பிடிக்காமல், விரைவில் வளர்ந்து பெரியவனாகிறார். ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறார். பணத்துக்காக உடல் நலனை இழக்கிறார். பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறார். எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் சிந்திப்பதில், நிகழ்காலமும் எதிர்காலமும் மனிதருக்கு இல்லாமலே போகிறது. சாகாமல் இருக்க வாழ்கிறார். ஆனால் வாழாமலே சாகிறார் என்றார். பின்னர் அந்த மனிதர் கடவுளிடம், “இவ்வுலகில் வாழும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தந்தையாக சொல்ல விரும்புவது என்ன?” என்று கேட்டார். புன்னகைத்த கடவுள், அவரிடம், “ யாரும் உன்னை அன்புகூர வேண்டும் என்று முயற்சிக்காதே. ஆனால், அன்புகூரப்படும் அளவு நடந்து கொள். எல்லாம் இருக்கிறவர் பணக்காரர் என்று நினைக்காதே. உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவர்தான் பணக்காரர். நாம் அன்புகூரும் ஒருவரைப் புண்படுத்த சில நொடிகள் போதும். ஆனால் அந்தப் புண்ணைக் குணப்படுத்த பல ஆண்டுகள் தேவைப்படும். ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும், எச்சூழலிலும் அவனை விரும்புவதுமே! அடுத்தவரை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும். நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம், நீ செய்ததையும் மறந்து போகலாம். ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”என்றார் கடவுள். பேட்டி முடிந்தது. இது ஒரு கனவுப் பேட்டி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.