2015-09-09 16:32:00

திருத்தந்தை வருகைக்கு கத்தோலிக்க இளையோர் ஏற்பாடுகள்


செப்.09,2015. கடவுளின் கருணையையும் அன்பையும் பிறருக்கு எடுத்துச் செல்லும் சீடர்களாக இளையோர் வாழவேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் விரும்புகிறார் என்று வாஷிங்க்டன் பேராயர், கர்தினால் டோனல்ட் வர்ள் (Donald Wuerl) அவர்கள் கூறினார்.

இம்மாதம் 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின்போது, இளையோர், அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவும், அந்நிகழ்வுகளில் தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றவும், வாஷிங்டன், பிலடெல்பியா, நியூயார்க் ஆகிய நகரங்களின் கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

வாஷிங்டன் கத்தோலிக்கப் பல்கலைக் கழகம், நியூயார்க் புனித ஜான் பல்கலைக் கழகம், பிலடெல்பியா புனித யோசேப்பு பல்கலைக் கழகம் ஆகிய மூன்றும் இந்த முயற்சிகளில் முன்னணி வகிக்கின்றன என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

பிலடெல்பியாவில் நடைபெறும் அனைத்துலக மாநாட்டில், திருத்தந்தை தலைமையேற்கும் சிறப்புத் திருப்பலி நடைபெறும் மேடையை, கட்டிடக் கலையைப் பயிலும் Notre Dame பல்கலைக் கழக மாணவர் வடிவமைத்துள்ளார் என்றும், வாஷிங்டன் நகரில், அருளாளர் ஜூனிபெரொ செர்ரா அவர்களின் புனிதர் பட்ட திருப்பலி நிகழும் மேடை, கத்தோலிக்க பல்கலைக் கழக மாணவர்களால் வடிவமைக்கப்படுகிறது என்றும் CNS செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.