2015-09-09 16:22:00

அரசுத்தலைவராக விழையும் வேட்பாளர்களுடன் கர்தினால் தாக்லே


செப்.09,2015. வருகிற ஆண்டு பிலிப்பின்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், பிலிப்பின்ஸ் நாட்டின் அரசியல் தர்மத்தை இன்னும் உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று, மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

பொறுப்புள்ள வாக்களிப்பு குறித்த மேய்ப்புப்பணி அவை என்ற குழுவினரால் இத்திங்களன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில், அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்துவரும் மூவரைச் சந்தித்த கர்தினால் தாக்லே அவர்கள், அம்மூவருக்கும் ஒரு செப வழிபாட்டையும், விருந்தையும் வழங்கியதாகக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்றும், விவிலியத்தில் கூறப்பட்டுள்ள ஊழியத் தலைமைத்துவம் (Servant leadership) குறித்து கர்தினால் தாக்லே அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார் என்றும், இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த குழுவினர் தெரிவித்தனர்.

அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரையும் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை குறிப்பிட்ட வகையில் ஆதரிக்கவில்லை என்ற தெளிவை, ஆயர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.