2015-09-09 16:44:00

அமைதி ஆர்வலர்கள் : 1994ல் நொபெல் அமைதி விருது பாகம் 3


செப்.09,2015. 1994ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது முன்னாள் பாலஸ்தீனத் தலைவர் எஸ்ஸர் அரபாத், முன்னாள் இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres, முன்னாள் இஸ்ரேல் பிரதமர் Yitzhak Rabin ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது. மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுவதற்கு இம்மூவரும் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி இவ்விருது அளிக்கப்பட்டது. இம்மூவரில் எஸ்ஸர் அரபாத், Shimon Peres ஆகிய இருவர் பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். இன்று Yitzhak Rabin அவர்கள் பற்றிப் பார்ப்போம்.

Yitzhak Rabin அவர்கள், 1994ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதைப் பெற்று ஆற்றிய உரையில், “தேசியத் தலைவர்கள் மனித வாழ்வைப் புனிதப்படுத்தத் தவறியதன் மவுனச் சான்றுகளே, உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இராணுவக் கல்லறைகள்” என்று கூறினார். 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரையும், பின்னர் 1992ம் ஆண்டு முதல் அவர் கொலை செய்யப்பட்ட 1995ம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி வரையும், இஸ்ரேலின் பிரதமராக இரு முறைகள் பணியில் இருந்தவர் யிட்சாக் ராபின். இவர், “நான் PLO நிறுவனத் தலைவரும், பாலஸ்தீன மக்களின் தலைவரும், அம்மக்களின் பிரதிநிதியுமாகிய அரபாத் அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறேன், ஏனெனில் இஸ்ரேல் ஒரு யூத நாடாகவும், இஸ்ரேலுக்கு அருகிலிருக்கும் பாலஸ்தீனா ஒரு நாடாகவும், இவ்விரு நாடுகளுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவும், அருகருகே உள்ள இவ்விரு நாடுகளும் அமைதியில் வாழவும் வேண்டுமென்பதே என் நோக்கம்” என்று சொன்னார். இவரின் இவ்வெண்ணத்தை விரும்பாதவர்கள் இவரின் உயிரையே பறித்துவிட்டார்கள். “நான் எருசலேமில் பிறந்தேன், இங்கு பிறந்த ஒருவர் பிரதமராகி இருப்பதில் நான்தான் முதலாவது நபர், முன்னாள் இராணுவ அதிபர் ஒருவர் பிரதமராகி இருப்பதிலும் நான்தான் முதலாவது நபர்”என்றும் யிட்சாக் அவர்களே சொல்லியிருக்கிறார்.

“அமைதிக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” என்று அமைதியை உருவாக்குவதில் ஆர்வம் காட்டிய Yitzhak Rabin அவர்கள், 1922ம் ஆண்டு மார்ச் முதல் தேதி எருசலேமில் பிறந்தார். இவருக்கு ஒரு வயது நடந்தபோது இவரது குடும்பம் தெல் அவிவ் நகருக்குக் குடிபெயர்ந்தது.  அங்கு தொழிலாளர் சிறார் பள்ளியில் சேர்ந்து, 1935ம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தார். பள்ளியில் வேளாண்மை பற்றியும்., யூதம் பற்றியும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இவரது தாய் ரோசா ஆரம்பித்த வேளாண்மை பள்ளியில் 1935ம் ஆண்டில் சேர்ந்து, துப்பாக்கியைத் தூக்கும் முறை மற்றும் காவல் காப்பதும் பற்றியும் கற்றுக்கொண்டார். யூத-பொதுவுடைமை இளையோர் இயக்கத்திலும் இணைந்தார். பிரித்தானியரைப் பகைவராகக் கருதியதால் ஆங்கிலம் படிப்பதில் இவருக்கு விருப்பம் கிடையாது. இவர் வேளாண் துறையில் பொறியியல் படிப்பை முடிக்க ஆசைப்பட்டார். ஆனால், தொடர்ந்து இடம்பெற்று வந்த அரபு கலகம் மேலும் மோசமடையவே, இராணுவத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டினார். Haganah என்ற யூத உப இராணுவ அமைப்பின் இளைஞர் தலைவர் Yigal Allon, ராபினுக்கு இந்த அமைப்பில் பயிற்சி அளித்தார். 1948ம் ஆண்டில் அரபு-இஸ்ரேல் போரின் போது லியா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தனர்.

இளவயதிலே இஸ்ரேல் இராணுவத்தில் சேர்ந்த ராபின் அநர்கள், 27 ஆண்டுகள் படைவீரராக இருந்தார். இராணுவத்தில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று வந்த இவர், இஸ்ரேலின் சுதந்திரப் போரின்போது முக்கிய நபராகத் திகழ்ந்தார். அதன்பின்னர், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படையில்(IDF) 1948ம் ஆண்டின் இறுதியில் சேர்ந்தார். படைவீரராக, தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வந்தார். 1950களில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் பயிற்சிக் கோட்பாடுகளை வடிவமைப்பதில் உதவியதோடு, 1959ம் ஆண்டு முதல், ‘63ம் ஆண்டுவரை அப்படையின் நடவடிக்கைகளை வழிநடத்தினார். 1964ம் ஆண்டில் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார் 1967ம் ஆண்டில் நடந்த ஆறுநாள் போரில் இஸ்ரேலுக்குப் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தார் Yitzhak Rabin. 1968ம் ஆண்டு முதல் ‘73ம் ஆண்டு வரை இஸ்ரேலின் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதராகப் பணியாற்றினார். அச்சமயத்தில், இஸ்ரேலுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையேயுள்ள உறவை வலுப்படுத்தினார். Golda Meir பதவி விலகியதையடுத்து, 1974ம் ஆண்டில் இஸ்ரேலின் பிரதமராக நியமிக்கப்பட்டார் யிட்சாக் ராபின்.

யிட்சாக் ராபின் அவர்கள், பிரதமராகப் பணியாற்றிய முதல் காலக்கட்டத்தில், சீனாய் இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். உகாண்டா நாட்டின் Entebbe விமான நிலையத்தில் பிணையல் கைதிகளை வைத்திருந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆணையிட்டார். இஸ்ரேல் அரசில் நிதி நிலைமையில் ஏற்பட்ட ஊழல் காரணமாக, 1977ம் ஆண்டில் பிரதமர் பதவியை விட்டு விலகினார். இஸ்ரேல் ஆக்ரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனியரின் முதல் கலகம் உட்பட, 1980களில்  ராபின் அவர்கள், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். 1992ம் ஆண்டில் இவர் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்லோ ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக, பாலஸ்தீனியத் தலைமையோடு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 1994ம் ஆண்டில் பாலஸ்தீனத் தலைவர் எஸ்ஸர் அரபாத், இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres ஆகிய இருவருடன் சேர்ந்து நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டார். 1994ம் ஆண்டில், ஜோர்டன் நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். இந்த அமைதி ஒப்பந்தங்களை விரும்பாத இஸ்ரேல் அமைப்பின்  Yigal Amir என்பவரால் 1995ம் ஆண்டு நவம்பரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இஸ்ரேல்-பால்ஸதீனிய அமைதி ஒப்பந்தத்தின் அடையாளமாக இருக்கிறார் யிட்சாக் ராபின். இஸ்ரேலில் பிரதமர் பதவியில் இருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டாவது பிரதமர் ராபின். இவருக்கு முன்னர் Levi Eshkol அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

“நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள தனித்துவமிக்க வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அமைதியை நோக்கிச் செல்வதற்கு, இஸ்ரேலின் பிரதமராக எனது கடமைகளை ஆற்ற வேண்டியது எனது பொறுப்பு என நம்புகிறேன்” என்று உரைத்த ராபின் அவர்கள், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காகக் கொல்லப்பட்டார். யிட்சாக் ராபின் சொன்னார்: “நீ நண்பர்களோடு அமைதி ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. உன்னைப் பாதுகாக்க முடியாத பகைவர்களுடன் அமைதி ஏற்படுத்து” என்று. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.