2015-09-08 16:37:00

விவிலியத் தேடல் : இறுதித் தீர்ப்பு உவமை – பகுதி - 4


செல்லுமிடம் அறியாது கடலில் தவித்த ஒரு கப்பலில் இருந்தோரைக் கரை சேர்த்தவர், வேளைநகர் அன்னை என்பதை நாம் அறிவோம். அந்த அன்னையின் பிறந்தநாளைக் கொண்டாடிய நாம், பிறந்து மூன்றே ஆண்டுகளில், செல்லுமிடம் அறியாது, கடலில் தன் உயிரை இழந்த ஒரு குழந்தையைப் பற்றிய எண்ணங்களுடன் இன்றைய நம் தேடலைத் துவக்குகிறோம்.

அய்லன் குர்தி (Aylan Kurdi) என்ற 3 வயது சிறுவனின் பெயரும், உருவமும், கடந்த சில நாட்களாக பல கோடி மக்களின் மனங்களில் ஆழப் பதிந்துள்ளது. அதுவும், வேதனை தரும் ஒரு காயமாகப் பதிந்துள்ளது. துருக்கி நாட்டின் கடற்கரையில் சடலமாக ஒதுங்கியிருந்த சிறுவன் அய்லன், மனித சமுதாயத்திற்கு முக்கியமானக் கேள்விகளை விட்டுச் சென்றுள்ளான்.

நாடுவிட்டு நாடு துரத்தப்படும் அகதிகளின் பிரச்சனை, இதுவரை, ஒரு புள்ளிவிவரமாக, எண்ணிக்கையாக இருந்துவந்ததால், அது நம்மை அதிகம் பாதிக்கவில்லை. சிறுவன் அய்லனின் சடலம், அந்தப் பிரச்சனைக்கு ஒரு மனித முகத்தைத் தந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக, சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போர், ஆய்லனைப் போல், ஆயிரமாயிரம் குழந்தைகளையும், குடும்பங்களையும் அகதிகளாக அலையவிட்டுள்ளது.

 

அந்தக் கொடுமையிலிருந்து தப்பித்துச்செல்லும் பல்லாயிரம் குடும்பங்களில், சிறுவன் அய்லன் குடும்பமும் ஒன்று. ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்ட அய்லனின் தாய், அவனது அண்ணன், அய்லன் மூவரும் கடலில் மூழ்கி இறந்தனர். அய்லனின் உயிரற்ற உடல், துருக்கி கடற்கரையில் ஒதுங்கி, சமூக வலைத்தளங்களில் பதிவாகி, உலக அரசுகளின் மனசாட்சியைத் தட்டியெழுப்பியுள்ளது.

ஒரு வார்த்தையும் பேசாமல், சிறுவன் அய்லன், நம் அனைவருக்கும் முக்கியமான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளான். துன்பத்தில் சிக்கியிருக்கும் அயலவருக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? என்பதே, சிரியாவைச் சேர்ந்த சிறுவன் அய்லன், நம் அனைவருக்கும் விடுக்கும் கேள்வி.

சில மாதங்களுக்கு முன், சிரியாவைச் சேர்ந்த மற்றொரு சிறுவனும், தன் மரணத்திற்கு முன், சங்கடமான செய்தியை விட்டுச்சென்றதாக சமூக வலைத்தளங்கள் செய்தியொன்றை வெளியிட்டன. சிரியாவின் உள்நாட்டுப் போரினால் காயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் ஒருவன், இறப்பதற்கு முன், "நான் கடவுளிடம் போனதும், இங்கு நடப்பது அனைத்தையும் சொல்லப்போகிறேன்" என்று சொல்லிவிட்டு இறந்ததாக செய்திகள் வெளியாயின.

சங்கடமான உண்மைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ள இவ்விரு குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பார்க்கும்போது, "பாலகரின் மழலையிலும், குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி, உம் பகைவரை ஒடுக்கினீர்; எதிரியையும், பழிவாங்குவோரையும் அடக்கினீர்" (திருப்பாடல் 8:2) என்று திருப்பாடலில் கூறப்பட்டுள்ள சொற்கள், நினைவுக்கு வருகின்றன. உலகில் ஓங்கி ஒலித்துவரும் பல அநீதியான கருத்துக்களை, இவ்விரு குழந்தைகளும் கேள்விக்கு உள்ளாக்கிச் சென்றுள்ளனர். இவ்விரு சிறுவர்களும், நமக்கு விட்டுச் சென்றுள்ள இரு கருத்துக்கள், நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள 'இறுதித் தீர்ப்பு உவமை'யுடன் தொடர்புள்ள கருத்துக்கள்.

போரில் காயப்பட்டு இறந்த சிறுவன், கடவுளைச் சந்திக்கப் போவதாகச் சொன்னதை, நாம் இந்த உவமையிலும் காண்கிறோம். நாம் அனைவரும், நம் மரணத்திற்குப் பிறகு இறைவனை, மானிட மகனைச் சிந்திப்போம். அந்தச் சந்திப்பில், இறைவன் கேட்கும் ஒரே கேள்வி: "அயலவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்பதே.

சிறுவன் அய்லன், கடலில் மூழ்கி இறந்தது, அயலவர் பற்றிய ஓர் அக்கறையை, குறிப்பாக, திக்கற்று, அகதிகளாகத் திரியும் சிறியோர் பற்றிய ஓர் அக்கறையை, பல கோடி மக்களின் மனங்களில் உருவாக்கியுள்ளது. இந்த அக்கறையே, இறுதித் தீர்ப்பு உவமையின் அடித்தளமாக அமைந்துள்ளது.

இறைவனைச் சந்திப்பது, சிறியோர் மீது அக்கறை என்ற இவ்விரு கருத்துக்களையும் உள்ளடக்கிய இவ்வுவமையின் முதல் பகுதிக்குச் செவிமடுப்போம்:

மத்தேயு நற்செய்தி 25: 31-36

இயேசு கூறியது: “வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, 'என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.”

அரியணையில் வீற்றிருக்கும் அரசர், வலதுபக்கம் இருப்போருக்கு வழங்கும் ஆசீர், முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது: 'என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.’

விண்ணக உரிமை என்பது, மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் துவக்கத்திலிருந்தே வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை யாரும்  நம்மிடமிருந்து பறித்துவிடமுடியாது.  நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இவ்வுரிமையை நாமே இழக்க முடியுமே தவிர, வேறு யாரும் இதை நம்மிடமிருந்து பறித்துவிட முடியாது. இவ்வுரிமையை பெறுவதற்கோ, அல்லது, இழப்பதற்கோ நாம் செய்யக்கூடிய ஆறு செயல்களை, தன் வரவேற்புக்குப்பின் அரசர் வரிசைப்படுத்துகிறார்.

பசித்தோருக்கு உணவளித்தல்

தாகமாயிருப்போரின் தாகம் தணித்தல்

அன்னியரை ஏற்றுக்கொள்ளுதல்

ஆடையற்றவருக்கு ஆடை அணிவித்தல்

நோயுற்றவரைக் கவனித்துக் கொள்ளுதல்

சிறையிலிருப்போரைத் தேடிச் செல்லுதல்

என்ற ஆறு செயல்பாடுகளை அரசர் வரிசைப்படுத்துகிறார்.

இறைவன் மோசே வழியாகத் தந்த பத்துக் கட்டளைகளிலோ, அல்லது, இஸ்ரேல் மக்களுக்கு மோசே வழங்கிய நடைமுறைச் சட்டங்களிலோ இந்த ஆறு செயல்களும் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. எனவே, இறுதித் தீர்ப்பில் அரசர் உயர்த்திப்பிடிக்கும் அளவுகோல், கட்டளைகள், சட்டங்கள் என்ற வரைமுறைகளையெல்லாம் தாண்டி வகுக்கப்பட்டுள்ள ஒரு தனித்துவமான அளவுகோல் என்பதை, அரசர் வரிசைப்படுத்தும் ஆறு செயல்பாடுகள் தெளிவாக்குகின்றன.

மோசே வழங்கிய சட்டங்களில், கைம்பெண்கள், அனாதைகள், அன்னியர் ஆகியோரை, நீதியுடன், கனிவுடன் நடத்தவேண்டும் என்பதே, கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளன.

விடுதலைப் பயணம் 22: 21-24

அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.

மோசே வரையறுத்த இக்கடமையை, இறைவாக்கினர்கள், மக்களுக்கு மீண்டும், மீண்டும் நினைவுறுத்தி வந்தனர்.

எசாயா  1: 17

நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

கைம்பெண்கள், அனாதைகள், அன்னியர் என்ற இந்த மூன்று குழுவினரோடு, 'வறியோர்' என்ற குழுவினரையும் இறைவாக்கினர்கள் இணைத்தனர்.

செக்கரியா 7: 9-10

"படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; நேர்மையுடன் நீதி வழங்குங்கள்; ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள்;

கைம்பெண்ணையோ, அனாதையையோ, அன்னியரையோ, ஏழைகளையோ ஒடுக்க வேண்டாம்; உங்களுக்குள் எவரும் தம் சகோதரனுக்கு எதிராகத் தீமை செய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம்."

கைம்பெண்கள், அனாதைகள், அன்னியர், வறியோர் ஆகிய நான்கு குழுவினரும் அடைந்துவந்த துன்பங்கள், 'இறுதித் தீர்ப்பு உவமை'யில் இன்னும் தெளிவாக, குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. உணவு, நீர், உடை, இருப்பிடம் இன்றி தவிப்பதும், உடல்நலம் குன்றியோ, சுதந்திரத்தை இழந்தோ வாடுவதும், இம்மக்கள் அனுபவிக்கும் துன்பங்களாகக் கூறப்பட்டுள்ளன.

மற்றொரு அழுத்தமான உண்மையும், அரசரின் கூற்றில் வெளியாகிறது. இத்துன்பங்களால் இவர்கள் வாடும்போது, இறைவனும் அவர்களுடன் இணைந்து துன்புறுகிறார் என்பதை, அரசரின் வார்த்தைகள் தெளிவாக்குகின்றன.

'பசியால் இருந்தோருக்கு நீங்கள் உணவு கொடுத்தீர்கள்' என்று அரசர் சொல்லவில்லை; மாறாக, ‘நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்று அரசர் சொல்கிறார்.

ஏழைகள் வடிவில் இறைவன் வருவதை, அல்லது, வாழ்வதை, பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும் பல வழிகளில் சொல்லித் தந்துள்ளன. மெக்சிகோவில் வாழ்ந்த Aztec என்ற பழங்குடியினர் எழுதிவைத்த ஒரு கவிதை, இறைவனை இவ்வகையில் அடையாளப்படுத்துகிறது. மண்ணோடு மண்ணாக, சிறு, சிறு துண்டுகளைப்போல் வாழும் மக்களைத் தேடினால், அங்கு அவர்களோடு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இறைவனைக் காணமுடியும் என்பதை, இக்கவிதை கூறுகிறது. இக்கவிதையின் சுருக்கம் இதோ:

"வாழ்வுப் பாதையில் நீங்கள் நடந்து செல்லும்போது, உங்கள் வாழ்வை வழிநடத்தும் ஒரு சக்தியை, கடவுளின் ஒரு சிறு பகுதியை நீங்கள் தேடினால், கீழ்நோக்கி நீங்கள் பார்க்கவேண்டியிருக்கும். நீங்கள் தேடும் கடவுள், சின்ன விடயங்களில் இருப்பார், பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பார். ஒருவேளை, பூமிக்கு அடியிலும் அவர் இருக்கலாம். கடவுளைத் தேடுவோர், தலையைத் தாழ்த்தி, கீழ்நோக்கிப் பார்க்கவேண்டும், கீழ்நோக்கிப் பார்க்கவேண்டும்"

படைப்பு அனைத்தும் இறைவனின் ஒரு பகுதி என்று பல மதங்கள் கூறுகின்றன. துன்புறும் மனித சமுதாயம், தன்னில் ஒரு பகுதி என்று இறுதித் தீர்ப்பு நேரத்தில் இறைவன் நமக்கு மீண்டும் நினைவுறுத்துகிறார். இதற்கு நாம் அளிக்கப்போகும் பதில் என்ன?  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.