2015-09-08 16:27:00

திருஅவையில் திருமண ஒப்பந்த முறிவு – புதிய வழிமுறைகள்


செப்.08,2015. திருமண ஒப்பந்த முறிவு குறித்த திரு அவையின் சட்ட அமைப்புக்களில் மாற்றங்களைப் புகுத்தி, Motu Proprio எனும், தன் சுய விருப்பத்தோடு எடுத்த முடிவுகள் கொண்ட அறிக்கை இரண்டை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Mitis Iudex Dominus Iesus, அதாவது, 'ஆண்டவர் இயேசு, இரக்கமுள்ள நீதிபதி' என்று தலைப்பிடப்பட்ட அப்போஸ்தலிக்க மடல், இலத்தீன் திருஅவையின் திருமண ஒப்பந்த முறிவு குறித்த வழிமுறைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் சீர்படுத்துவதாக அமைந்துள்ளது.

Mitis et misericors Iesus, அதாவது, 'கருணையும் இரக்கமும் உள்ள இயேசு' என்று தலைப்பிடப்பட்ட அப்போஸ்தலிக்க மடல், கீழை வழிபாட்டு முறை திருஅவையில் திருமண ஒப்பந்த முறிவு குறித்த வழிமுறைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் சீரமைப்பதாகவும் அமைந்துள்ளது.

திருத்தந்தை வழங்கியுள்ள இந்த புதியக் கோட்பாடுகள், திருமண ஒப்பந்த முறிவை ஆதரிக்கவில்லை, மாறாக, திருமண ஒப்பந்த முறிவு வழிமுறைகளை துரிதப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை, திருஅவையில் நிலவி வந்த திருமண முறிவு சட்டங்களின் பாதை, மிகவும் சிரமமாக உள்ளதை மாற்றி, அவற்றை, விரைவானதாக மாற்றும் வழிகளை உருவாக்கவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு மறைமாவட்டத்தின் ஆயரே, இத்தகைய விடயங்களில் முதன்மை நீதிபதி என்பதை வலியுறுத்தும் திருத்தந்தை, ஒரு நாட்டின் ஆயர் பேரவையின் கடமைகளையும் இங்கு எடுத்துரைத்துள்ளார்.

திருமண முறிவு குறித்த சட்ட வழிமுறைகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இது குறித்த ஆய்வினை மேற்கொள்ள வல்லுநர் குழு ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்கனவே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.