2015-09-08 16:57:00

கொத்து வெடிகுண்டுகளின் தடை – திருப்பீடம் மகிழ்ச்சி


செப்.08,2015. கொத்து வெடிகுண்டுகளின் பயன்பாட்டைத் தடைசெய்யவும், பழையத் தவறுகளைத் திருத்தவும் முன்வந்திருக்கும் அனைத்து நாடுகளுக்கும், திருப்பீடம் தன் நன்றியையும், வாழ்த்துக்களையும் வெளியிடுவதாக, திருப்பீட உயர் அதிகாரி, பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் தெரிவித்தார்.

ஜெனீவாவில் இயங்கிவரும் ஐ.நா. நிறுவனத்தில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றிவரும் பேராயர் தொமாசி அவர்கள், கொத்து வெடிகுண்டுகள் குறித்த ஒப்பந்தம் பற்றிய முதல் ஆய்வுக் கூட்டத்தில், இத்திங்களன்று உரையாற்றியபோது, இவ்வாறு கூறினார்.

மனிதகுலம் காட்டும் அக்கறையின் மையமாக, மனிதர்கள் இருக்கவேண்டும் என்றும், தங்கள் பொறுப்புணர்வுகளை புரிந்து, கொத்துவெடிகுண்டுகள் குறித்து, நாடுகள் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார், பேராயர் தொமாசி அவர்கள்.

ஆயுதத் தடை குறித்த முந்தைய ஒப்பந்தங்கள் தோல்வியடைந்ததிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் அதிகம் உள்ளன என்று சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி அவர்கள், புதிய தடை ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதுடன், முந்தையக் காலங்களில் கொத்து வெடிகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.