2015-09-07 17:11:00

திருத்தந்தை-புலம்பெயர்ந்த குடும்பங்களை ஏற்று வாழ்வளியுங்கள்


செப்.07,2015. ஐரோப்பாவில் ஒவ்வொரு பங்குத்தளமும், துறவற இல்லமும், திருத்தலமும், புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தை ஏற்குமாறு, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பாவிலுள்ள என் சகோதர ஆயர்கள், இந்த எனது அழைப்புக்குச் செவிமடுக்க வேண்டுமெனக் கேட்கிறேன் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எனது சொந்த மறைமாவட்டமான உரோம் தொடங்கி, வத்திக்கானிலுள்ள இரு பங்குகளும் இந்தப் புலம்பெயர்ந்த குடும்பங்களை ஏற்பதற்கு தயாராகி வருகின்றன எனவும் உரைத்தார். அன்பின் இரண்டாவது பெயர் கருணை என்பதை நினைவில் கொண்டு, உண்மையான மேய்ப்பர்களாக, அவரவர் மறைமாவட்டங்களில் இந்தக் குடும்பங்கள் ஏற்கப்பட வழி செய்யுங்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டுக்குத் தயாரிப்பாக, இந்த இரக்கச் செயல்களைச் செய்யுங்கள் எனவும் விண்ணப்பித்தார்.

போர் மற்றும் பசிக்குப் பயந்து, கடும் துன்பங்களை எதிர்கொண்டு, வாழ்வில் நம்பிக்கையிழந்து வரும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவது நம் கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

கடந்த வார இறுதியில் அன்னை தெரேசாவின் நினைவு நாள் சிறப்பிக்கப்பட்டதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை தெரேசா அவர்களின் செயல்கள் வழியாக இறைவனின் இரக்கமும், கருணையும் வெளிப்பட்டன, மன உறுதியுடன் பாதுகாப்பான இறுதி நிலையை அடைவதை நோக்கிப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்நம்பிக்கை உதவுகின்றது என்று மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.