2015-09-07 16:02:00

கடுகு சிறுத்தாலும் - மனிதர் பற்றிய கணக்கு தவறக் கூடாது


அந்த வீட்டில் அந்தச் சிறுமி சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு தனது இரு கைகளில் இரண்டு ஆப்பிள் பழங்களை வைத்துக்கொண்டு மாறி மாறி அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அச்சிறுமியின் தாய், "நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கிறாய், எனக்கு ஒன்று கொடு" என்றார். ஒரு வினாடி தன் தாயைப் பார்த்த அச்சிறுமி, உடனே ஓர் ஆப்பிளைக் கடித்தார். அடுத்ததாக இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டார். தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் மகள் மீது கோபம் வந்தது. தனது மகள் இவ்வளவு சுயநலத்தோடு இருக்கிறாளே என்று வருந்தினார் தாய். தனக்கு ஒரு ஆப்பிளையாவது அல்லது அதில் பாதியையாவது மகள் தருவாள் என்று எதிர்பார்த்தார் தாய். தான் கேட்டவுடன் தனது செல்ல மகள் இரண்டு ஆப்பிள்களையும் உடனடியாக கடித்து விட்டதால் அடைந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தார் தாய். ஆனால் அச்சிறுமி, தாயிடம் "அம்மா இந்த ஆப்பிள்தான் இனிப்பாக இருக்கு.. நீங்க இதை எடுத்துக்கங்க!" என்று சொல்லி இனிப்பான ஆப்பிளைத் தாயிடம் கொடுத்தார். இரு ஆப்பிள்களை வைத்து தனது தாய்க்கு நல்லதொரு பாடத்தைச் சொல்லி விட்டார் சிறுமி.

அன்பர்களே, ஒருவருக்கு அறிவும் அனுபவமும் அதிகமாகவே இருக்கலாம். ஆனால் ஒருவரைப் பற்றி உடனடியாக கணிப்பதைச் சற்று தள்ளிப்போட வேண்டும். மனக்கணக்கு தவறலாம். மனிதரைப் பற்றிய கணக்கு தவறக்கூடாது....! (நன்றி:மனிதன்)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/மனிதன்








All the contents on this site are copyrighted ©.